உதவி என்ற பெயரில் மோசடி? ஆம்புலன்ஸ் கொடுத்ததில் ஸ்கேம்? குறிவைக்கப்படும் பாலா!

கேபிஒய் பாலாமீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், அதற்கு அவர் அளித்த பதில்கள் குறித்தும், மேலும் திரையுலகில் பாலாவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும் இங்கு காண்போம்.;

Update:2025-09-16 00:00 IST
Click the Play button to listen to article

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள் சமீபகாலமாக இந்தப் பெயரை கேள்விப்படாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறுவிதமான உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருபவர் KPY பிரபலம் பாலா. கலைமீதான ஆர்வத்தால் சின்னத்திரையில் நுழைந்து, பின்னர் கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் தலைக்காட்டி, தற்போது கதாநாயகனாக வளர்ந்திருப்பவர்தான் பாலன் ஆகாஷ் எனும் KPY பாலா. படத்தில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல், நிஜவாழ்க்கையிலும் கதாநாயகன்தான் என பலராலும் பாராட்டப்பட்டு வந்தாலும், பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் பாலா. அதாவது அவர் செய்யும் உதவிகளில் மோசடி நடப்பாதவும், விளம்பரத்திற்காகவே அவர் உதவி செய்வதாகவும், பிறரிடம் பணம் வாங்கியே அவர் உதவிகள் செய்து வருவதாகவும் பல்வேறு விமர்சனங்கள் பாலா மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் பாலாவின் படத்தை ஓடவிடாமல் தடுக்க பலரும் முயற்சிப்பதாக ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அன்று சிவகார்த்திகேயனுக்கு எப்படி பிரச்சனைகள் வந்ததோ, அதுபோல இப்போது பாலாவுக்கு பிரச்சனைகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி பாலா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், காந்தி கண்ணாடி படக்குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இப்பதிவில் பார்க்கலாம். 


பாலாவிற்கு பல்வேறு தருணங்களில் ஆதரவாக இருந்த அமுதவாணன்

யார் இந்த KPY பிரபலம் பாலா?

பள்ளிப் பருவத்திலிருந்தே நகைச்சுவை திறன் கொண்ட பாலாவிற்கு, ‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியின்போது சின்னத்திரைப் பிரபலம் அமுதவாணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அமுதவாணனிடம் தானும் இதுபோன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிக்கவேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது பாலா 11ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். பாலாவின் ஆர்வத்தை பார்த்த அமுதவாணன் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு தன்னை அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு வருடங்களுக்கு பிறகு பாலாவும் நம்பிக்கை இழக்காமல், அமுதவாணனை தொடர்புகொண்டுள்ளார். அமுதவாணனும் பாலாவை சென்னைவரக் கூறியுள்ளார். உடனே தனது வீட்டில் இருந்து ஒருபைசாக்கூட எடுக்காமல், நண்பர்கள் கொடுத்த வெறும் ரூ.130-ஐ எடுத்துக்கொண்டு சொந்த ஊரான காரைக்காலில் இருந்து சென்னை வந்துள்ளார் பாலா. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தன்னுடன் தங்கவைத்து பாலாவை பார்த்து வந்துள்ளார் அமுதவாணன். கல்லூரி படிப்பை முடித்தபின்பு கலக்கப்போவது நிகழ்ச்சியின் இயக்குநரான தாம்சன் மூலம் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பாலாவிற்கு கிடைக்கிறது. முதலில் கிடைத்த வாய்ப்பை குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தவறவிட்ட பாலா, அடுத்த சீசனில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். 


ஜுங்கா படத்தில் நடித்த கேபிஒய் பாலா

ஆனால் தன்னுடன் நடித்த மற்றொருவரால் எலிமினேஷன் நிலைக்கு தள்ளப்பட்ட பாலாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளனர் அந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பாலா, அந்த சீசனில் சாம்பியன் பட்டமும் வென்றார். அதனைத்தொடர்ந்து கேபிஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் பாலாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனது நகைச்சுவைத்திறனை பலருக்கும் வெளிக்காட்டிக் கொண்டிருந்த சமயத்தில் விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிப்பதற்கு பாலாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் பாலாவிற்கு என்று ஒரு தனிப்பாடலும் கொடுக்கப்பட்டது. அப்படம் சரியாக ஓடாவிட்டாலும் பாலாவின் நடிப்பை பாராட்டினார் விஜய்சேதுபதி. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிடைத்த சின்ன சின்ன படவாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார் பாலா. தும்பா, சிக்ஸர், புலிக்குத்தி பாண்டி, காக்டெய்ல், லாபம், ஃப்ரண்ட்ஷிப், ஆண்டி இந்தியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இதனிடையே சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமும் தன்னை மக்களிடம் ஆழமாக பதியவைத்து வந்தார் பாலா. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக திரையில் தோன்றி தனது திறமையை நிரூபித்த பாலா தற்போது ‘காந்தி கண்ணாடி’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.


லாரன்ஸுடன் பாலா & ‘காந்தி கண்ணாடி’-யில் கதாநாயகனாக பாலா

காந்தி கண்ணாடி...

என்னதான் நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும், ஒருசிலரே மக்களுக்கு உதவிபுரிவர். அவ்வாறு மக்களுக்கு உதவிபுரியும் நடிகர் ராகவா லாரன்ஸே பார்த்து வியந்த ஆள்தான் பாலா. திரையில் தன்னை வளர்த்துக்கொண்டு வந்த அதேசமயம், தரையிலும் மக்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்துவந்தார் பாலா. மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்ததை உதவுவது, வீடு கட்டித் தருவது என தற்போதுவரை தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனால் பொதுமக்கள் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றார் பாலா. இதனிடையே பாலாவின் இந்த உதவி குணத்தை பார்த்த லாரான்ஸ், அவரை அழைத்து உனக்கு என்னவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பாலா தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பிலேயே பாலாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள்ளேயே இயக்குநர் ஷெரிஃப்பின் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலா.

ஒரு நடுத்தர மனிதனின் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இப்படத்தில் பாலாவுடன் நடிப்பதற்கு எந்த ஹீரோயினும் ஒப்புக்கொள்ளவில்லையாம். கிட்டத்தட்ட 50 ஹீரோயின்களுடன் பேசப்பட்டு, 51வது ஆளாக நமிதா கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டாராம். செப்.5ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஒரு நகைச்சுவை கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு கருணை உள்ளம் கொண்ட மனிதராகவும் வலம் வரும் பாலாவின் இந்த ஹீரோ அவதாரம் வெற்றியடைந்துள்ளதாகவும், இந்தப் படத்தின் வெற்றி, அவருக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகளைக் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஹீரோவாக அறிமுகமானபோது சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர்கள் பாலாவுக்கும் கொடுக்கப்படுவதாக தகவல்

அன்று சிவகார்த்திகேயன்... இன்று பாலா...

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கடினப்பட்டு வந்தவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் தனக்கு நிறைய குடைச்சல்கள் கொடுக்கப்பட்டதாக பல இடங்களில் பேசியிருப்பார் சிவகார்த்திகேயன். அதுபோல தற்போது பாலாவுக்கு பல்வேறு பிரச்சனைகள் கொடுக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ரிலீஸான அன்றுதான் பாலாவின் காந்தி கண்ணாடி படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் கொடுக்கப்படுவதாக காந்தி கண்ணாடி படக்குழுவினர் தெரிவித்தனர். அதாவது படம் ரிலீஸாவதற்கு முன்பே, தவறான ரிவியூக்கள் கொடுக்கப்பட்டதாகவும், தங்கள் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும், படம் ஓடுவதாக அறிவிக்கப்பட்ட தியேட்டருக்கு சென்றால் வேறொரு படம் போடப்படுவதாகவும் படத்தின் இயக்குநர் ஷெரிஃப் வேதனை தெரிவித்தார். இதற்கு பின்பு பிரபலம் ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அது யாரென்று குறிப்பிடப்படவில்லை. படம் ஒருபக்கம் இருக்க பாலாவின் உதவிகளும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகின்றன. மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, மருத்துவ செலவுக்குப் பணமில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது எனப் பல வழிகளில் பலருக்கும் உதவி வருகிறார் பாலா.


சூப்பரான போஸில் கேபிஒய் பாலா

பாலாவின் இந்த சேவை மனதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் அதேசமயம் மற்றவர்கள் கொடுக்கும் பணத்தில்தான் பாலா இப்படி உதவி செய்து வருவதாகவும், பாலாவை பலரும் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் பல்வேறு விமர்சனங்கள் பாலா மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாலா வாங்கிக்கொடுத்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு பின்னால் ஒரு என்ஜிஓ செயல்பட்டு வருவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். முறையாக செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதே சிறந்ததாக இருக்கும் என்றும், அதுதான் மக்களுக்கு பயன்படும் என்றும் சிலர் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் விளம்பரத்திற்காகவே பாலா இவ்வாறு உதவிகள் செய்துவருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இவ்வாறு தன்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பாலா பதில் அளித்துள்ளார். “இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட வாங்கி உதவி பண்ணல. இரவு பகலா கஷ்டப்பட்டு உழைச்ச சொந்தக்காசுலதான் உதவி பண்றேன். இதற்கு மேலும் யாரிடமும் காசு வாங்கி உதவி பண்ணமாட்டேன். என் உழைப்பில்தான் உதவி செய்வேன். ஒரு சதவீத மக்கள் என்னை விமர்சித்தால், அதற்கு 99 சதவீத மக்கள் பதில் சொல்கிறார்கள். என்னை ஆதரிக்கிறார்கள். அதனால் நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் இங்க நிக்குறதுக்கு ஒரே காரணம் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு எப்போதுமே நன்றியுள்ளவனாகத்தான் இருப்பேன்” என பாலா அழுத்தம் திருத்தமாக அசால்ட்டாக பதிலளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்