இந்தியாவின் காலை வாரிவிட்ட அமெரிக்கா! தோள் கொடுக்கும் சீனா! நம்பலாமா?
இந்தியா மீதான அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்ட வழிவகுத்துள்ளது. மேலும் சீனாவும் சில காரணங்களால் இந்தியாவுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளது.;
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே ஒரு உறவு துளிர்விட ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் இருநாடுகளுக்கிடையே மோசமடைந்திருந்த இந்திய-சீன உறவு, திடீரென சுமூகமாக, அதிபர் ட்ரம்ப் என்ன செய்தார்?
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியாவுடன் முரண்படும் அமெரிக்கா...
அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். எல்லா நாடுகளுக்கும் பரஸ்பர விதி என்ற நிலையில், சீனாவிற்கு மட்டும் தொடர்ந்து வரிவிதித்தார். அதாவது சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 145% வரி விதித்தது. அதற்கு பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீது சீனாவும் 125% வரி விதித்தது. அதன் பிறகு மே மாதம் நடைபெற்ற இருநாட்டு தலைவர்கள் சந்திப்பிற்குப் பின், இருநாடுகளும் வரிகளைக் குறைத்தன. ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான வரிமோதல் முழுமையாக இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த வர்த்தகப் போரினால் சீனா இந்தியா பக்கம் திரும்ப ஆரம்பித்தது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பயணத்தை எளிதாக்க சீன அரசாங்கம் பல தளர்வுகளையும் அறிமுகப்படுத்தி இருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு. இந்த வரிவிதிப்பு ஆக.27 முதல் அமலுக்கு வருகிறது. ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் இடையேயான போர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த பலநாடுகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு எட்டப்படவில்லை. அதிலும் இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனிடையே உக்ரைன் உடன் ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து அந்நாட்டுடனான கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது இந்தியா. இது அமெரிக்கா உடனான உறவை தற்போது பாதித்துள்ளது. அதாவது, தங்களிடம் இருந்து பணத்தை பெற்று, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி அதனை சந்தையில் பன்மடங்கிற்கு இந்தியா விற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் தொடர ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் சீனாவுடன் இந்திய உறவு மேம்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பால் நெருக்கமாகும் சீனா - இந்தியா
சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா...
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற லடாக், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கபட்டது. ஆனாலும் இந்த உறவை சரிசெய்ய அவ்வப்போது இருநாடுகளும் சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இரு ராணுவங்களும் உயர்மட்ட சந்திப்புகளை தொடர்ந்து நடத்தின. இதன் விளைவாக, அக்டோபரில் எல்லை ரோந்துகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதே மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். அதன் பிறகு, ஜனவரியில் இரு நாடுகளும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்தன. ஆனாலும் இரு நாடுகளுக்கிடையே ஒரு சிக்கல் நீடித்து வந்தது. இருநாடுகளும் மற்றொரு நாட்டின் முக்கியப் போட்டியாளருடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. அதாவது அமெரிக்காவுடன் இந்தியா, பாகிஸ்தானுடன் சீனா நெருக்கமாக இருந்தன.
ஆனால் தற்போது இந்தநிலை மாறிவருகிறது. காரணம் அமெரிக்காவின் வரிவிதிப்பு. அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில், சீனாவுடன் இந்தியா நெருக்கமாவதை பார்க்கலாம். அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் அதிகரித்த பதற்றம் தணிந்தாலும், பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் வரிவிதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது சீனா. இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய சீன தூதர் ஷு ஃபெய்ஹோங், “இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேலும் கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது. சீனா இதை வலுவாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நாட்டை ஊக்குவிக்கும்” எனத் தெரிவித்தார். மேலும் இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் இரட்டை என்ஜின்கள் எனவும், இரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமை ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயக்கும் எனவும் கூறினார். அதேநேரம் அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவர் எதிரிகளாக பார்க்காமல் கூட்டாளிகளாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வாங் யீ-ஐ சந்தித்த பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையேயான நிலையான, நம்பத்தகுந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உறவுகள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலக அமைதி மற்றும் செழிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானுடன் அமெரிக்காவும், இந்தியாவுடன் சீனாவும் நெருக்கமாகி வருகின்றன
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் அமெரிக்கா...
சீனாவும், இந்தியாவும் இவ்வாறு திடீர் நெருக்கம் காட்ட வரிவிதிப்பு மட்டும் காரணமல்ல. கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிவருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் விளைவாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத அமைப்புகள் மட்டும்தான் தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் இந்த தாக்குதல் நடவடிக்கையில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்தது. இதனால் இருநாடுகளுக்கிடையே போர்பதற்றம் நிலவியது. அப்போது பல நாடுகளும் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டால் அது ஆசியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என தெரிவித்தன. சில நாட்களில் இருநாடுகளுக்கிடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிற்கும் - பாகிஸ்தானிற்கும் இடையேயான இந்த மோதலை நிறுத்தி வைத்தது தான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை பொதுவெளியில் பேசினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வந்த அதேநேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிர் முனீர் இரண்டுமுறை அமெரிக்காவுக்கு சென்றுவந்தார். அமெரிக்காவில் இருந்தவாறே இந்தியாவிற்கு மிரட்டலும் விடுத்தார். ஆனால் இதற்கு அமெரிக்கா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதுவும் அமெரிக்கா மீது ஒரு அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதேவேளை சீனா பாகிஸ்தானில் மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளது. குறிப்பாக பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் பல லட்சம் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதனிடையே அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கமாக செல்வதை சீனா விரும்பவில்லை. இந்த காரணத்தினால்தான் சீனா இன்னும் கூடுதல் நெருக்கத்தை இந்தியாவிடம் காண்பித்து வருகிறது. மேலும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் இடைவெளி நீடித்தால், தெற்கு சீனக்கடலில் தங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தலாம் என சீனா எண்ணம் கொண்டுள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ப்ரிக்ஸ் கூட்டமைப்பும் இந்தியா - சீனா உறவை வலுப்படுத்தியுள்ளன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ & பிரதமர் மோடி
அமெரிக்காவின் இடத்தை ஈடுகட்டுமா சீனா?
என்னதான் இந்தியா, சீனா நாடுகள் நெருக்கம் காட்டினாலும் இது ஒரு நல்லுறவாக பார்க்கபடுமே தவிர, இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாவது கடினம். காரணம், இந்தியாவிற்கு தற்போது ஆதரவாக பேசும் சீனா அதைவிட பாகிஸ்தானிடம் நெருக்கமாக இருந்துவருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று சீன அமைச்சர் டெல்லி வந்த அதேநேரம், குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா வந்த அதே கையோடு பாகிஸ்தானுக்கு சென்றும் பேச்சுவார்த்தை நடித்தினார். இந்தியா நீண்ட காலமாக 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு' பாகிஸ்தானை குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது சீனா. மேலும் தனது முதலீடுகள் காரணமாக சீனா பாகிஸ்தானை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. மறுபக்கம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக அமெரிக்கா உள்ளது. அதே சமயம் சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் இடத்தை சீனாவால் ஒருபோதும் நிரப்ப முடியாது என அரசியல் பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சீனாவில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்திற்கு பின்பு இந்த உறவு வலுவடையுமா என்பது குறித்தும், சீனாவை நம்பலாமா என்பது குறித்தும் தெரியவரும்.