எனக்கு நல்ல மாப்பிள்ளையை கட்டிவைக்கல! நான் கஷ்டப்படுறேன்! அம்மாவிடம் அழுத நடிகை தீபா!
சின்னத்திரை முதல் வெள்ளித்திரைவரை, கடின உழைப்பால் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ள நடிகை தீபா சங்கர், தனது தாய், கணவர், மகன்கள் குறித்தெல்லாம் மனம்திறந்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.;
சின்ன சின்ன வேடங்களில் சின்னதிரையில் நடித்து, மக்கள் மத்தியில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் தனது இயல்பான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகை தீபா. கதாப்பாத்திரங்களில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் தனது இயல்பான மற்றும் வெள்ளந்தியான பேச்சுத் தோரணையால் அனைவராலும் தீபா அக்கா என அன்பாக அழைக்கப்பட்டு வரும் நடிகை தீபா குறித்துதான் இந்த வாரம் காண இருக்கிறோம். தனது குடும்பம், குழந்தைகள், தாய் குறித்தெல்லாம் அவர் மனம்திறந்து பேசியுள்ள நெகிழ்ச்சியான தகவல்களையும் பார்க்க இருக்கிறோம்.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகை தீபா
நடிகை தீபா
1987ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தீபா. ஐந்து பிள்ளைகளில் கடைக்குட்டியாக பிறந்த இவர், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வேறுபட்டவராக இருந்துள்ளார். இதனால் இவர்மீது அப்பா, அம்மா சற்று கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். அப்பா ஒரு ஆசிரியர். அம்மா ஒரு அரசுப் பணியாளர். ஊர் திருவிழாக்களில் நடனம் ஆடுபவர்களை பார்த்து சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளார் தீபா. மேலும் நடனத்தால் நாட்டுப்புற கலைஞர்கள் வாங்கும் கைத்தட்டலை பார்த்து இன்னும் நடனத்தின் மீதும், நடிப்பின் மீதும் ஆர்வம் வந்துள்ளது. இதனால் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக தனக்குத்தானே பேசிபார்ப்பது, நடனம் ஆடுவது என திறமையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கல்லூரி படிப்புக்காக தூத்துக்குடியில் இருந்து, கோயம்புத்தூருக்கு செல்கிறார். அங்கு தீபாவின் திறமையை பார்த்த சக மாணவிகள் உனக்கு ‘நல்லா நடிக்க வருது’, நீ ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போதுதான் மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரின் ‘புதுமுகங்கள் தேவை’ என்ற விளம்பர போஸ்டரை பார்க்கிறார் தீபா. உடனே அந்த ஆடிஷனுக்கு போய் தேர்வும் ஆகிறார். இப்படி தனது திரை உலக வாழ்க்கையை தொடங்கிய தீபா, மெட்டி ஒலி மூலம் ரசிகர்கள் இடத்தில் நல்ல அறிமுகம் பெறுகிறார். அதனைத்தொடர்ந்து முகூர்த்தம், கோலங்கள், மலர்கள் என பல தொடர்களில் நடித்தார். பின்னர் ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் அக்கா வேடத்தில் சிறப்பாக நடித்து கவனம் பெற்றார்.
பிரபல சமையல் நிகழ்ச்சியில் நடிகை தீபா
தீபாவின் திருமண வாழ்க்கை
இதற்கிடையில் தீபா வீட்டில் திருமண பேச்சு எழுந்துள்ளது. தங்கள் சாதியில் நடித்தால், யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, தனது நடிப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும், வேறு எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லை என தீபா தெரிவித்துள்ளார். மறுபக்கம், தான் படிக்கவில்லை என்பதால், தனக்கு ஒரு படித்த குடும்பத்தில், படித்த பெண் கிடைத்தால் போதும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் மணமகன் சங்கரிடத்தில் இருந்தது. இவரும் நடிப்புக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், தீபாவும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். பின்னர் திருமணம், குழந்தைகள் என தீபாவின் இயல்பு வாழ்க்கை சென்றுள்ளது. அப்போது ‘கார்த்திகை பெண்கள்’ தொடரில் இடம்பெறுவதற்கான ஒரு வாய்ப்பு தீபாவை தேடிவந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட தீபா, திரை வாழ்க்கையில் விழுந்த இடைவெளியை ஈடுகட்டினார். அதன்பிறகு வாணி ராணி, மரகத வீணை, சரவணன் மீனாட்சி சீசன்2, லட்சுமி ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, நாச்சியாபுரம், செந்தூரப்பூவே, அன்புடன் குஷி போன்ற பல தொடர்களில் நடித்தார்.
கணவர் சங்கருடன் நடிகை தீபா
தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார். அபி டெய்லர், இது சொல்ல மறந்த கதை, மீனாட்சி பொண்ணுங்க, வித்யா நம்பர் 1, பாரதி கண்ணம்மா 2, சீதாராமன் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார். இடையில் 2018ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலமும் கவனம் ஈர்த்தார். மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி தீபாவின் இயல்புத்தன்மை, சகப் பணியாளர்களுக்கு தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வை கொடுத்துள்ளது. அதுவே, இன்று ‘தீபா அக்கா’ என்று சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் அன்பாக அழைக்க காரணமாக அமைந்துள்ளது.
கனவுக்கு உறுதுணையாக இருந்த கணவர்...
நடிப்பின் ஆரம்ப காலக்கட்டத்தில் குழந்தை நட்சத்திரத்திற்கு தரும் சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தையே பெற்றுள்ளார் தீபா. இதை பல நிகழ்ச்சிகளில் கூறியிருப்பார். என்னதான் சினிமாவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கணவர் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மறுபுறம், தான் சினிமா சம்பளத்தை நம்பி தீபாவை திருமணம் செய்யவில்லை என சங்கர் கூறியுள்ளார். மேலும், மனைவி தீபா ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், வீட்டில் துணி துவைப்பது, வீடு பெருக்குவது, சமையல் செய்வது என, இது ஆண்வேலை, பெண்வேலை என்று பிரித்து பார்க்காமல் அனைத்து வேலைகளையும் மனைவிக்காக செய்து வருகிறார் சங்கர்.
தனது இரண்டு மகன்களுடன் நடிகை தீபா
குழந்தைகள்...
நடிகை தீபாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகனுக்கு காது பிரச்சனை உள்ளது. இதனால் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் தீபா. அவர் செய்த பாவத்தால்தான் இதுபோல மகன் பிறந்துள்ளான் என பலரும் விமர்சிப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். “இது பாவம் என்றால், நான் எனது பள்ளிக் காலத்திலேயே, பார்வை திறனற்றோர், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வு எழுதி தருவது, அவர்களை கழிவறைகளுக்கு அழைத்துச் செல்வது என பல உதவிகளை செய்துள்ளேன். அதுவும் நான் செய்த பாவத்தால்தான் செய்தேனா” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் தங்கள் மகனை படிக்க வைத்து, தற்போது சக மனிதர்களை போல கொண்டு வந்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகை தீபா.
அம்மாவிடம் சொல்லக்கூடாத வார்த்தை...
அண்மையில் தீபா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன் கணவரின் அருமை தற்போது புரிவதாகவும், ஆனால் திருமணம் ஆன சமயத்தில், "எனக்கு நல்ல மாப்பிள்ளையை நீ கட்டிவைக்கல, நான் கஷ்டப்படுறேன்" என்று அம்மாவிடம் அழுது புலம்பிய காலங்கள் உண்டு என்றும் கூறியுள்ளார். தன்னை தன் அம்மா, மிகவும் கோழையாக வளர்த்துவிட்டதாக சிறுவயதில் அவர் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய நிறம், உடல்வாகு போன்றவற்றை பார்த்து பலரும் கேலி செய்ததாகவும், கேலி செய்தவர்களை எதிர்த்து தன்னால் எதுவுமே பேச முடியவில்லை என்றும், அழுகை மட்டுமே வரும் என்றும் கூறியுள்ள தீபா, அப்போதெல்லாம், தன் அம்மாவை, தான் திட்டியதாகவும் மனம் வருந்தி பேசியுள்ளார். விவரமே தெரியாமல் தன்னை வளர்த்த அம்மாவை, ஒரு கட்டத்தில், நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? செத்துப்போ என்று திட்டியதாகவும், அவ்வாறெல்லாம் திட்டியதற்காக தற்போது அழுவதாகவும் தீபா தெரிவித்துள்ளார். மேலும், தாய் என்பவள் உயிரோடு இருக்கும்போது, அவளது அருமை தெரியாது என்றும், அவள் போனபிறகே அவளது அருமை தெரியும் என்றும், அந்த துன்பத்தை தான் இப்போது அனுபவிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, அம்மாக்களை பிள்ளைகள் யாரும் அவ்வாறு திட்டிவிடாதீர்கள் என்றும், அவள் உயிருடன் இருக்கும்போதே அவளை போற்றி, பாசத்துடன் வாழுங்கள் என்றும் தீபா கேட்டுக்கொண்டுள்ளார்.