ஆரோக்கியத்தில் கவனம்
2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் செவ்வாய், 5-ம் இடத்தில் கேது பகவானுடன் இருக்கிறார். 5-ம் இடம் ஆன்மிகம் என்பதால், இந்த வாரம் நீங்கள் எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், அல்லது கோயில்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். உங்களின் வேலையில் இந்த வாரம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். உங்களின் வேலைக்குரிய கிரகம் புதன் நான்காம் இடத்தில் இருப்பதால், வேலையில் திருப்தியற்ற மனநிலை அல்லது "இந்த வேலையைப் பார்க்கலாமா, ஏன் பார்க்கிறோம்" என்ற எண்ணங்கள் தோன்றக்கூடும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வேலையை ரசித்து செய்யுங்கள்; வேலை கிடைப்பதே பெரிய விஷயம் என்பதை உணருங்கள். இந்த வாரம் நீங்கள் அனைவரிடமும் அனுசரித்துப்போவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை, குறிப்பாக இரத்த அழுத்தம், அடிவயிற்றுப் பிரச்சனை, முதுகுவலி உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கம் இருந்தாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வியாபாரம் சுமாராக இருக்கும், லாபம் வருவதில் தடைகள் இருக்கும். பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள் அல்லது அவர்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பைரவரையும் சனி பகவானையும் வழிபட்டால் உடல் ஆரோக்கியமும், வேலையும், வியாபாரமும் மேம்படும்.