"செவ்வாய் மாறுகிறது" திருப்பரங்குன்றம் முருகனை சரணாகதி அடைந்துவிடுங்கள்!

ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு செவ்வாய் திசை தொடங்குகிறது. இது இந்தியாவில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா? உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அது நல்ல தாக்கமாக இருக்குமா? மக்கள் என்ன செய்ய வேண்டும்?;

Update:2025-07-29 00:00 IST
Click the Play button to listen to article

செவ்வாய் திசை என்பது ஒருவரின் வாழ்க்கையில் தைரியம், வீரம், உடல் வலிமை, நிலம், சொத்து ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் திசை சாதகமாக இருந்தால், அதிகாரப் பதவிகள் தேடிவரும். மேலும், எதிலும் சுறுசுறுப்பு, இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான உந்துதல், கல்வியில் மேன்மை, விளையாட்டு துறைகளில் சாதனை, குடும்பத்தில் தன சேர்க்கை போன்றவற்றையும் உண்டாக்கும். அதே நேரத்தில் செவ்வாய் திசை பாதகமாக இருந்தால், கோபம், மோதல், உடல்நலக் கோளாறு, குழந்தை பேறு பிரச்சனை, விபத்து, எதிர்பாராத இழப்பு உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். எனவேதான், செவ்வாய் திசையில் சாதகமோ, பாதகமோ, எதுவாக இருந்தாலும் முருகப்பெருமானை பற்றிக்கொள்ள சொல்வார்கள். அப்படியிருக்கையில் ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு செவ்வாய் திசை தொடங்குகிறது. இது இந்தியாவில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா? அல்லது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அது நல்ல தாக்கமாக இருக்குமா? மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளார், ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். அவர் ராணி  நேயர்களுக்கு அளித்த நேர்காணலின் தகவல்களை பார்ப்போம்...


செவ்வாய் திசையால் உலகம் முழுவதும் ஒருவித பதற்றம் - முருகப்பெருமான்தான் செவ்வாய்க்கு அதிபதி

இந்தியாவுக்கு ஆகஸ்டு மாதத்தில் இருந்து செவ்வாய் திசை ஆரம்பம் ஆவதாக சொல்கிறார்கள்... அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

நாம் ஒரு வீட்டில் இருக்கிறோம் என்று சொன்னால், அந்த வீட்டின் ஜாதகம் நம்மில் பிரதிபலிக்கும். உதாரணமாக, நாம் ஒரு விமானத்தில் பயணிக்கிறோம் என்றால், அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நிகழ்வு நம் மீதும் பிரதிபலிக்கும். அதேபோல நம் தாய் நாட்டிற்கு செவ்வாய் திசை ஆரம்பம் ஆகிறது. இந்த செவ்வாய் திசையின் பிரதிபலிப்பு, நாம் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கப் போகிறது. இது மிக மிக முக்கியமான நிகழ்வு. இது நமக்கு நன்மையை தர வேண்டும். ஒரு சூழல் வருகிறது என்றால், அது வருவதற்கு முன்பே அதனை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் நம் மனதை தயார்படுத்திக்கொண்டால், அந்த சூழலை வெற்றிக்கொண்டு விடலாம். அல்லது அந்த சூழலை சமாளித்துவிடலாம். 

எனவே முருகப்பெருமானை நாம் இப்போதே நினைத்துவிட வேண்டும். முருகப்பெருமான்தான் செவ்வாய்க்கு அதிபதி. எத்தனையோ செவ்வாய்க்கள், எத்தனையோ பூமிக்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன. இவை அனைத்துக்கும் தலைவன் இருப்பான் அல்லவா? அவனை நாம் முருகா என்று அழைக்கிறோம். அதிலும் தமிழ்நாட்டிற்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளில் முருகன் அமர்ந்துள்ளான். குன்றுதோறும் முருகன் என்று சொல்லக்கூடிய வகையிலே, நாம் ஒரு நலத்தில் குன்றிய நிலையில் இருக்கும்போது, அந்த முருகனை வணங்கிவிட்டால், அவன் நம்மை கரம் தூக்கி ஏற்றிவிடுவான்.

தற்போது இந்தியாவுக்கு வரும் செவ்வாய் திசை மிதுனத்தில் இருந்து செயல்படப்போகிறது. எனவே அதிகமான முருகன் வழிபாடு அவசியம். இது சிக்கலை தீர்த்து நன்மையை தரும். செவ்வாய் என்பது நிலத்தை குறிக்கும். வண்டி வாகனங்களையும், இரத்தத்தையும், போரையும், பெண்கள் ஜாதகத்தில் ஆண்கள் சார்ந்த உறவையும் குறிக்கும். இந்தியா என்பது புண்ணிய பூமி. உலகத்திற்கே குருவாக திகழ்க்கூடிய இடம். எனவே இந்தியாவின் ஜாதக பிரதிபலிப்பு என்பது, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே இருக்கும். எனவேதான், தற்போதே உலகம் முழுவதும் ஒரு அமைதியின்மை, போர் சூழல், பெரும் விபத்துகள், அணு ஆயுத ஆபத்து உள்ளிட்டவற்றை காண முடிகிறது. 


தெய்வானையுடன் அருள்புரியும் முருகன் - வராஹி அம்மன்

இந்த செவ்வாய் திசை 7 ஆண்டுகள் இருக்கப்போகிறதா?

ஆம். அதுவும் எப்படி என்றால்... செவ்வாய்க்கு கடகம் என்பது நீச்ச வீடு என்று சொல்வார்கள். இந்தியாவின் ஜாதகத்தில் செவ்வாய் மிதுனத்தில் இருந்து செயல்படப்போகிறது. அதாவது, நீச்ச வீடான கடகத்தை நோக்கி செல்லக்கூடிய செவ்வாய் என்பதால், 7 ஆண்டு காலமும் இறை பிரார்த்தனை மிகவும் முக்கியம். குறிப்பாக முருகனை வழிபட வேண்டும். முருகனில் எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன. சுமார் 64 வகையான முருகன் திருவுருவங்கள் உண்டு. அதிலும் ஆறுபடை வீடு தமிழ்நாட்டில் இருப்பது தமிழர்களுக்கு சிறப்பு. ஆறுபடை வீடுகளும், உடலில் 6 சக்கரங்களை குறிக்கின்றன. உதாரணத்திற்கு மூலாதாரம் என்று சொன்னால் அது திருப்பரங்குன்றம். மூலாதார சக்கரம்தான் உடலில் மிக முக்கியமானது. மேலும் உடலின் 6 சக்கரங்களுக்கு உண்டான தேவதைகள் திருப்பரங்குன்றத்தில் முருகனை வேண்டி வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் வராஹியை சுற்றியுள்ள 6 சக்தி நிலைகளும் வெளிப்படக்கூடிய ஒரே இடம் திருப்பரங்குன்றம். 

வராஹி அம்மனே யுத்தத்திற்கு சென்றபோது திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டதாக கூறப்படுகிறதே?

உண்மைதான். பாம்பாட்டி சித்தர் மரபிலே வந்தவர்கள் அறிந்து கூறியுள்ளனர். வராஹி, யுத்தத்திற்கு போகும்போது, முருகப்பெருமானின் அருளை பெற்று, 6 சக்கரங்களுக்கு உண்டான தேவதைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு, சிங்கத்தில் செல்வாளாம். அந்த வடிவத்திற்கு பெயர் வஜ்ரயோகினி ஆகும். யுத்தத்தை முடித்துவிட்டு வரும்போது மகிழ்ச்சியுடன் குதிரையில் வருவாளாம். இதற்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. கூஷ்மாண்டா என்ற அரக்கன், தவமிருந்து வரம் ஒன்று பெற்றான். தன்னை எதிர்ப்பது என்றால், பராசக்தியானவள்தான் எதிர்க்க வேண்டும். அதுவும், பெண்கள் என்றாலே அழகுக்கு முக்கியத்துவம் தரும் நிலையில், பராசக்தி, அழகை தவிர்த்து வராஹ முகம் போன்ற தோற்றத்தை எடுத்துக்கொண்டு, தன் மகனிடம் சென்று கையேந்தி, அவனின் சக்தியை பெற்று வந்துதான் சண்டையிட வேண்டும் என்று வேண்டிணானாம். 

இதனை அறிந்த பராசக்தி வராஹ முகத்தை எடுத்துக்கொண்டு, திருப்பரங்குன்றம் சென்று முருகப்பெருமானை அழைத்தாளாம். அவன் உடனே வந்து அம்மா என்று அழைத்தானாம். இதையடுத்து, உன்னை வணங்கும் 6 தேவதை சக்திகளை என்னுடன் அனுப்பிவை என்று கேட்டாளாம். இதையடுத்து 6 தேவதைகளின் புடை சூழ பராசக்தியானவள் வராஹி ரூபம் எடுக்கிறாள். வஜ்ரயோகினியானவள் வஜ்ரவராஹியாக மாறிவிட்டாள். இதனை பார்த்த கூஷ்மாண்டன், அம்மா தவறு செய்துவிட்டேன் என்று அழுதான். இதையடுத்து அவனை தேற்றி அனுகிரகம் செய்து வெற்றியுடன் திரும்பினாள் பராசக்தி. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் வெற்றிக்கு உதவுவான். 


பூதகணத்திடம் இருந்து நக்கீரரை மீட்ட முருகப்பெருமான்

செவ்வாய் திசையில் சண்டை சச்சரவுகள்..

செவ்வாய் திசையில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளதால், அவை தீர்ந்து வெற்றி கிடைத்து நற்காரியங்கள் நடக்க திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும். காரணம், ஜாதகத்தில் பிரேதபாதா என்ற ஒன்று உள்ளது. சில வீடுகளுக்கு செல்லும்போது ஒருவித அழுத்தத்தை நாம் உணர்வோம். ஒரு பய உணர்வு ஏற்படும். தீய சக்திகளின் சேட்டை இருப்பதாக சிலர் சொல்வார்கள். இதனை ஜாதகத்தில் பார்த்து கண்டுபிடிக்க, தூமா என்று ஒரு கிரகம் உள்ளது. இதற்கு, இந்திரசாப்பா, மாந்தி, குளிகன் போன்ற துணை கிரகங்கள் உள்ளன. இவைதான் பிரேதபாதா என்ற நிலையை உண்டாக்கும். அதுதான் காத்து கருப்பு சேட்டை. சிலருக்கு ஜாதகம் நன்றாக இருந்தாலும், ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வார்கள். ஒருமுறை நக்கீரருக்கே இந்த நிலை ஏற்பட்டதாம். சிவபெருமானையே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்தான் நக்கீரர். சிவனை இவ்வாறு கூறியதற்காக வருத்தப்பட்ட நக்கீரர், அதற்காக மனம் வருந்தி, பூமியில் திருப்பரங்குன்றத்தில் வந்து தவம் செய்தார். சிவனை எதிர்த்து கேள்விகேட்ட நக்கீரர், திருக்கயிலைக்கு செல்லாமல், முருகனின் திருப்பரங்குன்றத்தில் வந்து அமர்ந்து ஏன் தவம் செய்தார் என்றால், திருக்கயிலையில் இருக்க வேண்டிய சக்தி, திருப்பரங்குன்றத்திலும் இருக்கிறதாம். திருக்கயிலைக்கு செல்ல முடியாதவர்கள், திருப்பரங்குன்றத்திற்கு வந்தால், திருக்கயிலை சென்ற பலன் கிட்டிவிடுமாம். 

அந்த வகையில் சிவபெருமானை நினைத்து திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் தவம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பூதகணம் வந்து, சிவ அபராதம் செய்த 999 பேரை, தான் பிடித்துவைத்துள்ளதாகவும், நக்கீரரையும் பிடித்துச் செல்வதாகவும் கூறி அவரை பிடித்துக்கொண்டு பாதாள லோகத்திற்கு இழுத்து சென்றுவிடுகிறது. அப்போது நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதுகிறார். உடனே அங்குவந்த முருகப்பெருமான் நக்கீரர் உள்பட பூதத்திடம் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடுகிறார். இதுபோல பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் திருப்பரங்குன்றம் முருகன். எனவே செவ்வாய் திசை காலத்தில், எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபட்டு வருவது, நம்மை பிரச்சனைகளில் இருந்து காக்கும். செவ்வாய் திசையில், கெடு பலன்களில் இருந்து விடுபட, திருப்பரங்குன்றம் முருகனை சரணாகதி அடைவதை தவிர வேறு வழியே இல்லை. அவன் அருள் இருந்தால், எப்பேற்பட்ட சூழலையும் சமாளித்துவிடலாம். 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு