நல்ல குடும்பத்து பொண்ணுங்க ஜிம் போக மாட்டாங்க! அவமானங்கள் குறித்து மனம்திறந்த ஷெனாஸ்!

நல்ல குடும்பத்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல மாட்டார்கள் என்று என் அண்ணனே என்னை அவமானப்படுத்தியுள்ளார். மேலும் முன்னரெல்லாம் ஜிம் செல்லவும், பிகினி உடை அணியவும் கூச்சமாக இருக்கும்.;

Update:2025-08-12 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாகவே ஜிம்மிற்கு செல்பவர்கள் பாதி வேகவைத்த சிக்கன்தான் சாப்பிட வேண்டும், பெண்கள் ஜிம்மிற்கு சென்று எடை தூக்கினால் குழந்தை பிறக்காது, கருத்தரிப்பு தள்ளிப்போகும் போன்ற கருத்துகள் இருக்கின்றன. இந்த கருத்து உண்மைதானா? சிக்கன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் முறையாக செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் ராணி ஆன்லைனிற்கு அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார் பெண் பாடிபில்டர் ஷெனாஸ் ரஹ்மான்


உடற்பயிற்சி செய்பவர்கள் பாதி வேகவைத்த சிக்கனை சாப்பிடக்கூடாது  - ஷெனாஸ்

பாடி பில்டிங்கில் பாதி வேகவைத்த சிக்கன் சாப்பிடவேண்டும் என்பது உண்மையா?

சிக்கனே முதலில் சாப்பிடக்கூடாது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை மட்டும் சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்கள் மீன் எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான். மீன் உடலுக்கு மிகவும் நல்லது. பெண்கள் ஃபிட்னஸை மட்டும் பார்க்கக்கூடாது. ஃபிட்னஸுடன் அழகும் முக்கியம். சிக்கனில் புரோட்டீன் உள்ளது. பாடி பில்டர்களுக்கு ஒருநாளைக்கு இவ்வளவு புரோட்டீன் தேவை என்பதால் தினமும் சிக்கன் சாப்பிடுவோம். ஆனால் பாதி வேகவைத்ததை சாப்பிடக்கூடாது. முழுமையாக வெந்திருக்க வேண்டும். எண்ணெய், மசாலா எல்லாம் இல்லாமல், வேகவைத்து மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் என்னவென்றால், மீனைவிட சிக்கன் விலை குறைவாக இருக்கும். எனவே தினமும் மீன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் சிக்கன் எடுத்துக்கொள்வோம். அதேநேரம் சிக்கனில் மட்டும் புரோட்டீன் இல்லை. அதற்கு மாற்றாக காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முட்டை எடுத்துக் கொள்ளலாம். சிறுவர்கள் 3-4 முட்டைகள் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். பெண்கள் 5 முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம். 5 முட்டை எடுத்துக் கொள்ளும்போது 2 மட்டும் மஞ்சள் கருவுடன் எடுத்துக்கொண்டு, மற்ற மூன்றிலும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை மற்றும் தானியங்களில் புரோட்டீன் உள்ளது. 


டி-சர்ட் போடவே வீட்டில் அனுமதி இல்லாதநிலையில் ஸ்டேஜில் பிகினி அணிந்து நின்றேன் - ஷெனாஸ்

பாடி பில்டிங் குறித்து வீட்டில் இருப்பவர்களின் விருப்பம்?

நான் பாடி பில்டிங் செய்ய தொடங்கியபோது என் குழந்தைகள் சின்னப் பிள்ளைகள். இப்போது என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். மகள் 10ம் வகுப்பு. அவர்கள் எப்போதுமே என் பணியால் தாழ்வாக உணர்ந்ததில்லை. எனக்கு எப்போதும் சப்போர்ட் செய்வார்கள். பொதுவாகவே நமது ஊர்களில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இருக்கும். எங்கள் வீட்டில் முதலில் டிராக் பேண்ட், டி-சர்ட் போடவே அனுமதிக்கவில்லை. அவர்களை குறைசொல்ல முடியாது. காரணம் நமது கலாச்சாரம் அப்படி. மற்றவர்கள் என்னைப்பற்றி கேட்கும்போது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. பின் போகபோக புரிந்துகொண்டார்கள். முஸ்லிம் என்று இல்லை எந்த வீட்டிலும் பெண்கள் பிகினி உடை அணிந்து மேடையில் இருப்பதை குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள். ஆனால் பாடி பில்டிங்கிற்கான உடை அதுதான் என பின்னர் வீட்டில் புரிந்துகொண்டார்கள். 


பாடி பில்டிங்கில் எனக்கு கசாண்ட்ரா மார்ட்டின் பிடிக்கும் - ஷெனாஸ்

உங்களுக்கு மிகவும் பிடித்த தடகள வீராங்கனை யார்?

நான் முதன்முதலில் பார்த்து வியந்தவர் என்றால் கசாண்ட்ரா மார்ட்டின். நான் யூடியூபில்தான் கசாண்ட்ரா குறித்து பார்த்தேன். வடமாநிலங்களில் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெண் பாடிபில்டர்கள் குறைவுதான். இப்போதுதான் நிறைய பேர் பயிற்சி எடுத்து வருகிறார்கள். குடும்பத்தினரும் ஆதரவாக இருக்கிறார்கள். அதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்ததா?

அரசு வேலைக்கென்று ஒரு வயது வரம்பு உள்ளது. நான் பாடி பில்டிங் ஆரம்பித்ததே 27 வயதில்தான். நான் வேலைக்காக பாடி பில்டிங் செய்யவில்லை. பாடி பில்டிங் செய்தால் வேலை கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. அரசு தரப்பிலிருந்து எனக்கு எப்போதும் ஆதரவு கிடைத்ததில்லை. நான் எதிர்பார்த்தேன். இப்போது தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறைக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறது. பாடி பில்டிங் நிறையபேர் செய்வதில்லை. அதனால் அதனை அடையாளம் கண்டு, அரசுத் தரப்பில் ஆதரவு கொடுத்தால் இன்னும் நிறைய செய்யலாம். மற்ற விளையாட்டுகளைவிட பாடி பில்டிங்கில் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். எனக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும். 


தான் வென்ற பதக்கங்களுடன் பாடி பில்டர் ஷெனாஸ் ரஹ்மான்

உங்களை ஊக்கப்படுத்தியவர்கள் யார்?

என் பிள்ளைகள், எனக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்கள் சதீஷ்குமார் மற்றும் சிவா. எனக்கு பெரிதாக அரசுத் தரப்பிலிருந்தும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எல்லா விதத்திலும் ஆதரவாக இருந்தவர்கள் இவர்கள்தான். அவர்கள் கூறுவார்கள், உன்னுடைய உழைப்பினால்தான் இந்த இடத்தில் இருக்கிறாய் என்று. என்னதான் நான் உழைத்திருந்தாலும், அவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. நான் கடவுளுக்கு பிறகு மதிப்பவர்கள் என்றால், அது அவர்கள்தான். நான் எந்த உயரத்திற்கு சென்றாலும், அந்த புகழ் அனைத்தும் அவர்களுக்கே. எல்லோரும் என்னால் முடியுமா என கேள்வி எழுப்பியபோது, என்னை வளர்த்துவிட்டவர்கள் என் பயிற்சியாளர்கள்தான்.

நல்ல குடும்பத்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல மாட்டார்கள் என்று என் அண்ணனே என்னை அவமானப்படுத்தியுள்ளார். மேலும் முன்னரெல்லாம் ஜிம் செல்லவும், பிகினி உடை அணியவும் கூச்சமாக இருக்கும். ஜிம்மிற்கா போகிறீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள். அதனால் எங்கு போனாலும் ஜெர்கின் போட்டுக்கொண்டுதான் போவேன். வெளியே போனால் கைக்கட்டிதான் இருப்பேன். ஒருவிதத்தில் கான்ஷியஸாகவே இருப்பேன். ஜிம்மிற்கு சென்றாலே இப்படித்தான் நடப்பார்கள் என்று இல்லை. மஸுல்ஸ் பெரிதாகும்போது அப்படித்தான் இயல்பாக வரும். இதைவைத்து கிண்டல் செய்து எல்லாம் வீடியோ போடுவார்கள். ஆனால் அது அப்படி இல்லை.

இளம் வயதினருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

சமூக வலைதளங்களின் வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. ஆனால், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடமால், அதில் இருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாடு, வேலை, தூக்கம் என்பதுபோல அதற்கென கொஞ்ச நேரம் ஒதுக்கினால் போதும். இப்போது இருக்கும் பலரும் உடற்பயிற்சி செய்வது கிடையாது. சரியான தூக்கம், சாப்பாடு எடுத்துக் கொள்வதில்லை. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். உடல்நலத்தை பார்த்துக்கொள்ள ஜிம்மிற்குதான் செல்ல வேண்டும் என இல்லை. அரை மணிநேரம் நடந்தால் போதும். உங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள். பெண்கள் உங்களுக்கு தெரிந்த நடனம் ஆடுங்கள். நீச்சல் தெரிந்தால் நீச்சல் செய்யுங்கள். அடுத்தது உணவு. நீங்கள் எப்போதும் சாப்பிடும் உணவையே சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டுவிட்டு, போதுமான அளவு தண்ணீர் குடித்தால் போதும். உடல்நலம் நன்றாக இருக்கும். 


உடற்பயிற்சியின் போது ஷெனாஸ் ரஹ்மான்

ஃபிட்னஸில் ஈடுபடுவதால் கருத்தரித்தல் தள்ளிப் போகுமா?

நமக்கு தைராய்டு, பிசிஓடி போன்ற உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மட்டும்தான் கருத்தரித்தல் தள்ளிப்போகும். மற்றபடி ஜிம்மிற்கு செல்வதால், ஃபிட்னஸ் செய்வதால் பாதிப்புகள் இருக்காது. திருமணமாகாத பெண்கள் ஜிம்மிற்கு செல்லும்போது பலரும் அதிக எடை தூக்காதே, குழந்தை பிறக்காது, குழந்தை நிற்காது எனக் கூறுவார்கள். ஆனால் அப்படி கிடையாது. ஜிம்மிற்கு சென்றால் நீங்களாக அதிக எடையை தூக்காமல், பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி கொஞ்சம், கொஞ்சமாக செய்ய வேண்டும். வொர்க் அவுட் செய்வதால் பெண்கள் வலுப்பெறுவார்களே தவிர, கருத்தரித்தல், குழந்தை பிறத்தலில் எந்த பிரச்சனையும் வராது. 

Tags:    

மேலும் செய்திகள்