பாகிஸ்தானை ஜெயித்த இந்திய அணி, மக்களின் மனங்களை ஜெயித்ததா?
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது.;
இருநாடுகளுக்கிடையேயான அரசியல் மோதல், பகைமை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனங்கள் என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது ஆசிய கோப்பை 2025 தொடரின் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டி. கடந்த மே மாதத்துக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் முதல்முறையாக மோதியுள்ளன. பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி பிசிசிஐ பாகிஸ்தான் உடன் விளையாட ஒப்புக் கொண்டது. மற்ற அணிகளின் போட்டிகளைவிட உலகளவில் ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கவரும் கிரிக்கெட் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். ஆனால் வெற்றிக்குப் பின் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பலப்பரீட்சை
பஹல்காம் தாக்குதல்...
எப்போதுமே ஒரு மோதல்போக்கு நீடித்துவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையே மேலும் ஒரு நெருப்பு கொழுந்துவிட காரணமாக அமைந்ததுதான் இந்தாண்டு மத்தியில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதல். யாரும் எதிர்பாராத நேரத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, ஆபரேஷன் சிந்தூரை கையிலெடுத்தது. ஆனால் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், நியாயமான மற்றும் நடுநிலையான எந்த விசாரணைக்கும் தாங்கள் தயார் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். ஆனாலும் இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.
அரசின் கொள்கை...
மேலும் இருநாடுகளுக்கு இடையேனான கிரிக்கெட் போட்டிகள் தொடரவும் தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் நடைமுறைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம் எனத் தெரிவித்தது. இதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுவது உறுதியானது. ஒரு பக்கம் இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம்
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து...
கடந்த ஜூலையில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தான் உடனான போட்டிகளை விளையாட சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் மறுத்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. அரையிறுதியில் இந்தியா விளையாட மறுத்த நிலையில், பாகிஸ்தான் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்றது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பை போட்டிகளும் ரத்து செய்யப்படவேண்டும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து போட்டிக்கு தடைவிதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்!
2025 ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. தொடரின் முதல்போட்டி செப்டம்பர் 9ஆம் தேதியன்று தொடங்கியது. இறுதிப் போட்டி செப்டம்பர் 28 அன்று துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, இந்தத் தொடரில் பங்கேற்று வருகின்றன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் போட்டி அரபு அமீரகத்துடன் செப்.10ஆம் தேதி நடைபெற்றது. அதுபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், இது உணர்வுப்பூர்வமானதாக பார்க்கப்பட்டது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டி நடைபெறக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் சட்ட மாணவர்கள் சார்பில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை அவசர வழக்காகவும் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது வெறும் விளையாட்டுதான் என்றும், போட்டியை ரத்துசெய்ய முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாஜக, பிசிசிஐ மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜக மற்றும் பிசிசிஐயை கடுமையாக சாடின. சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், போட்டி நடைபெறும் நாளில் தனது கட்சியினர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தார். மேலும், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று பிரதமர் கூறியிருக்கும்போது, ரத்தமும் கிரிக்கெட்டும் எவ்வாறு ஒன்றாக பாயும்? என்ற கோள்வியையும் எழுப்பி இருந்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும் இது ஒரு அவமானம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தெரிவித்தது. போட்டியைத் தொடர அனுமதித்ததன் மூலம், பாஜக அரசின் இரட்டைவேடம் அம்பலப்பட்டதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூறியது.
பாகிஸ்தானுடன் விளையாட ஒப்புதல் அளித்த பிசிசிஐ, பாஜக மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மேலும் பஹல்காம் தாக்குதலில் தனது மகனை இழந்த சுபம் திவேதி, "ஏப்.22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஏதும் அறியாத 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான எந்த உறவும் இல்லை என்று இந்தியா கூறியது. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றும் அறிவித்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி, என்னை போன்ற பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே இதை எதிர்க்கிறது. அரசியலிலும், விளையாட்டிலும் பாகிஸ்தானுடன் உறவே இருக்கக்கூடாது என்று இந்தியா கூறுகிறது. ஆனால் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆதரவு...
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை வென்றவருமான கபில் தேவ், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, “வீரர்கள் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்த விஷயத்தாலும் திசைத்திரும்பக் கூடாது. அதனால் இதை பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம். அரசாங்கம் தனது வேலையைச் செய்யும். வீரர்கள் தங்கள் வேலையை செய்ய வேண்டும்” என்றார். இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், "அரசு ஒரு முடிவை எடுக்கிறது. ஆனால் வீரர்கள் ஏன் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. வீரர்கள் BCCI உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். பிசிசிஐ இந்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுகிறது. அனைத்தும் அரசையும், பிசிசிஐ-யையும் பொறுத்ததே. இந்த விஷயத்தில் வீரர்களால் எதுவும் செய்ய இயலாது. அவர்கள் ஆசியத் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். அரசு கூறினால் அவர்கள் விளையாடுவார்கள், ஒருவேளை மறுத்தால் பிசிசிஐ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்திய வீரர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்
இந்திய அணியின் நிலைப்பாடு என்ன?
இந்தப் போட்டியில் விளையாட தயாரான இந்திய வீரர்கள் அனைவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதனையடுத்து இதுதொடர்பாக பேசிய இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் கோட்டக், “பி.சி.சி.ஐ முடிவுக்கு அரசு ஒத்துப்போவதாக கூறியவுடன், எங்கள் கவனம் போட்டியில்தான் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும். வீரர்கள் மைதானத்தில்தான் கவனம் செலுத்துகின்றனர். வேறு எதிலும் அவர்களின் சிந்தனை இல்லை” எனக் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்...
இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் நடந்து முடிந்துள்ளது இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை 2025 தொடரின் ஆறாவது போட்டி. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய அவர், முதலில் பாகிஸ்தான் ரன்களை குவிக்க விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம். அதனால் டாஸ் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. எங்கள் அணி வீரர்கள் வலிமையாக தயாராகியுள்ளனர். இரவில் பேட்டிங் செய்வது சற்று எளிதாக இருக்கும்” என தெரிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 127 ரன்களே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும், அஃப்ரிடி 33 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 128 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்தியா, 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றாலும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
போட்டிக்கு பின் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காத இந்திய வீரர்கள்
போட்டி முடிந்ததும் கடைசியாக களத்தில் இருந்த இந்திய வீரர்கள் ஷிவம் துபேவும், யாதவ்வும், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றனர். இடையில் பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்க முயன்றும் இருவரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்தும் பாகிஸ்தான் அணியின் வீரர்களும், பயிற்சியாளரான மைக் ஹெசன் ஆகியோரும் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். ஆனாலும் அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். டாஸிற்கு பின்னரும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்கவில்லை. இந்திய அணியின் இந்த செயல்பாடு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு அழகு கிடையாது. விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும். விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது. அப்போது இந்தியா காசுக்காகத்தான் விளையாட ஒப்புக்கொண்டதா? என பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், பாகிஸ்தானை இந்தியா வென்ற போதிலும், மக்களின் மனங்களை வென்றதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம் இந்திய வீரர்களின் இந்த செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். #NOHANDSHAKE என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.