"ஆசிய கோப்பை" - இந்தியாவின் கோப்பையை எடுத்துச்சென்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது.;
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டி செப்.28 துபாயில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றாலும், கோப்பையும் இல்லை, பாராட்டுகளும் இல்லை. கோப்பை இல்லாமல் ஒரு அணி தனது வெற்றியை கொண்டாடியது இதுதான் முதல்முறை. கோப்பை இல்லாமல் இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடியது ஏன்? மற்ற நேரங்களைப்போல இந்தமுறை இந்தியாவின் இந்த வெற்றி கொண்டாடப்படாதது ஏன்? என்பன குறித்து காணலாம்.
முதல்முறையாக ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதிய பாகிஸ்தான் - இந்தியா
41 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக...
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் என மொத்தம் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்றன. இந்த எட்டு அணிகளும் ஏ, பி என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதன்மூலம் 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில், இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக மோதின.
9வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
9வது முறை சாம்பியன்...
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி செப்.28 துபாயில் நடைப்பெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய பாகிஸ்தான் மிட் ஆர்டரில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், பும்ரா, அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 01 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 24 ரன்களிலும், சிவம் துபே 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.
ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்க 150 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின்ஷா அஃப்ரிடி 1 விக்கெட்டையும், பாஹிம் அஸ்ரப் 3 விக்கெட்டுகளையும், அப்ரர் அஹமட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடரில் ஒன்பதாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. என்னதான் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றாலும் கடந்தமுறைகளை போல இந்தமுறை இந்திய அணியின் வெற்றி அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படவில்லை. இதற்குபின் பல அரசியல் காரணங்கள் உள்ளன. போட்டி முடிந்தவுடன் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வி வழங்க இருந்தார். ஆனால் பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. இதனால் கோப்பை இல்லாமலேயே இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது. பாகிஸ்தான் அமைச்சர், தன் நாட்டுக்கு அந்த கோப்பையை எடுத்து சென்றுவிட்டார். பாகிஸ்தானுக்கு சென்ற கோப்பையை இந்தியா எடுத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி என்பதுபோல வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி வாழ்த்து...
இந்தியாவின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், ‘விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர்... வெளியீடு ஒன்றுதான் - இந்தியா வென்றது! இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பதிவு உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
முதல் கிரிக்கெட் வீரர்...
பிரதமர் மோடியின் அரசியல் ரீதியான இந்த வாழ்த்துக் குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்விடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க மறுத்த சூர்யகுமார், போட்டிக்கு பிறகு எந்த சமூக ஊடகங்களையும் இன்னும் பார்க்கவில்லை எனக் கூறினார். இதற்கு முன் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தது, அந்த விளையாட்டு போட்டி அரசியலாக்கப்பட்டது, இந்நிலையில், தற்போது கோப்பையை வாங்க மறுத்தது குறித்து சூர்யகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அணியின் ஊடக மேலாளர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என்று சூர்யகுமாருக்கு அறிவுறுத்தினார். இதனிடையே விளையாட்டு போட்டியில் அரசியலை கலந்த முதல் கிரிக்கெட் கேப்டன் என பல ஆங்கில ஊடகங்கள் சூர்யகுமார் யாதவை குறிப்பிட்டுள்ளன.
பாகிஸ்தானுடனான முதல்போட்டிக்கு பின்பு கைக்குலுக்காமல் செல்லும் துபே - சூர்யகுமார் யாதவ்
இதைவிட மோசமாக இருந்தபோதுகூட...
முன்னதாக இறுதிப்போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா, “ஒவ்வொருவருக்கும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஒரு வேகப்பந்து வீச்சாளரின் உணர்ச்சியை நாம் தடுத்தால் பிறகு என்ன மிஞ்சும். ஒவ்வொரு வீரருக்கும் தங்களது உணர்ச்சியை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். களத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாகவும், உணர்வுபூர்வமாகவும் செயல்படுவதற்கு ஒரு கேப்டனாக ஆதரவாக இருப்பேன். அது அவமரியாதையாக இல்லாதவரை நான் யாரையும் தடுக்க மாட்டேன். இந்த தொடரில் நான் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை.
எனது ஸ்டிரைக் ரேட்டும் சரியாக இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் 150 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்ய வேண்டியது என்பது அவசியமில்லை. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். நான் 2007-ம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆட்டத்தில் இருந்து தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கினேன். அப்போது இருந்து எந்தவொரு அணியும் போட்டி முடிந்ததும் களத்தில் கை குலுக்காமல் இருந்ததை நான் பார்த்ததில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு இதைவிட மோசமாக இருந்த காலங்களிலும் இரு அணியினரும் கை குலுக்கி இருக்கின்றனர். கை குலுக்காமல் இருப்பது விளையாட்டு உத்வேகத்துக்கு நல்லதல்ல. வெளியில் மீடியாக்கள் மற்றும் மக்கள் சொல்லும் விஷயங்களை அணியால் கட்டுப்படுத்த முடியாது. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். மீடியாக்கள் மற்றும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை" என்று கூறினார்.
போட்டிக்கு பின் பேசிய அவர், “கைகுலுக்காமல் இருப்பதன் மூலம் எங்களை அவமதிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் கிரிக்கெட்டை அவமதிக்கிறார்கள். கிரிக்கெட்டை அவமதிப்பவர்கள் அவமதிக்கப்படுவார்கள். அது நடக்கும் என நம்புகிறேன். இன்று இந்தியா செய்ததுபோல் ஒரு நல்ல அணி இதை செய்யாது என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் மிகவும் நேர்மையாக சொல்ல வேண்டும், இது விளையாட்டை அவமதிக்கும் செயல், மற்றவர்களை அல்ல” என தெரிவித்தார்.
கேமராவிற்கு முன்பு மட்டும் பாகிஸ்தான் கேப்டனுக்கு கைக்கொடுக்காத சூர்யகுமார் யாதவ்
விளையாட்டில் அரசியல்...
பஹல்காம் தாக்குதல் விளைவாக இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் பிசிசிஐ விளையாட ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானுடனான இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி கைக்குலுக்க மறுத்தது. அப்போதே இது பெரும் பேசுபொருளானது. பலரும் இதற்கு விளையாடாமலேயே இருந்திருக்கலாம், விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது, இது நல்ல ஸ்போட்ஸ்மேன்ஷிப்பிற்கு அழகில்லை என தெரிவித்தனர். பின்னர் பாகிஸ்தான் உடனான முதல் போட்டியின் வெற்றிக்கு பிறகு, இந்த வெற்றி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு என இந்திய கேப்டன் சூர்யகுமார் குறிப்பிட்டது மேலும் சர்ச்சையானது. இதனால் அவருக்கு அவரது சம்பளத்திலிருந்து 30% அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியும் பஹல்காம் தாக்குதலை இந்த வெற்றியுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது உலகளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. உண்மையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், இந்தியா முதலில் பாகிஸ்தானுடன் விளையாட ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது, அதைவிடுத்து இப்படி விளையாட்டில் அரசியல் செய்வது அழகல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.