நினைத்து பார்க்க முடியாத உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்! என்ன சாதனை?

தென்னாப்பிரிக்க இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டி தொடரில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து காணலாம்.;

Update:2025-09-09 00:00 IST
Click the Play button to listen to article

கிரிக்கெட் வரலாற்றில் ஜோக்கர்ஸ் என கேலிகளுக்கு உள்ளாக்கப்பட்ட அணி தென்னாப்பிரிக்க அணி. இந்த கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் டெம்ப பவுமா தலைமையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா. டெம்ப பவுமா கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து தென்னாப்பிரிக்கா பல வெற்றிகளை தனக்கு சாதகமாக்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வெற்றியில் தென்னாப்பிரிக்க அணியைவிட அதிகம் கொண்டாடப்படுபவர், அணியில் உள்ள 26 வயதாகும் இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே. மேத்யூ ப்ரீட்ஸ்கே கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன? அறிமுகமான இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனதுடன், கிரிக்கெட் வீரர்கள் பலர் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனைகளை மேத்யூ ப்ரீட்ஸ்கே நிகழ்த்தியுள்ளார். யார் இந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே? பார்க்கலாம் வாங்க... 


இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியின்போது...

தென்னாப்பிரிக்காவின் 27 ஆண்டுகால வரலாற்று சாதனை...

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 132 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இந்த நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா. இதன்மூலம் 27 ஆண்டுகளில் முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா. மேலும் கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற பெருமையையும் பெற்றது தென்னாப்பிரிக்கா. இதற்கு முன் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. கடைசிப் போட்டி செப்.7ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் நடைப்பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கடந்த 2 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பதிலடியாக, அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 414/5 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 72 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இருப்பினும் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.  

டெம்ப பவுமா தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து, அந்த அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால் இந்த தொடரின் வெற்றியின்மூலம் தென்னாப்பிரிக்க அணியைவிட, அந்த அணியின் இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கேதான் கவனம் ஈர்த்து வருகிறார். காரணம் தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் மேத்யூ


ஐபிஎல் & சர்வதேச போட்டிகளில் இந்தாண்டு அறிமுகமான மேத்யூ ப்ரீட்ஸ்கே 

யார் இந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே? 

பள்ளிப்பருவத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் மேத்யூ ப்ரீட்ஸ்கே தனது 16 வயதில், தென்னாப்பிரிக்காவின் யு-19 அணியில் இடம்பெற்றார். 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1000த்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். 2018ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் எமர்ஜிங் அணியில் இடம்பெற்றார். பின்னர் 2018-19களில் தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். உள்நாட்டு போட்டிகளில் விளையாடி கவனம் பெற்றாலும், 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் 2025-ல் தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மோதிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் அறிமுக வீரராக ப்ரீட்ஸ்கே களமிறக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 

ஐபிஎல் அறிமுகம்...

மேத்யூ ப்ரீட்ஸ்கே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ஏலத்தில் வாங்கப்பட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடியதுதான் அவரது முதல் ஐபிஎல் போட்டி. இப்போட்டியில் 14 ரன்கள் அடித்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். 

ப்ரீட்ஸ்கேவின் உலக சாதனைகள்...

இந்தாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கி தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி 150 ரன்களுக்கு அவுட்டானார். இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை மேத்யூ ப்ரீட்ஸ்கே படைத்தார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் 148 ரன்களுடன் 1978ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். மேலும் தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுக போட்டியிலே சதம் விளாசிய 3வது வீரர் ப்ரீட்ஸ்கே ஆவார். இதற்கு முன்பு டெம்ப பவுமா, ஹென்ட்ரிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினார் ப்ரீட்ஸ்கே.


ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி, தொடர்ந்து விளையாடிய 5 போட்டிகளிலும் அரைசதம் அடித்து சாதனை 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ​​77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம், அறிமுக போட்டி மற்றும் அதனைத்தொடர்ந்து ஆடிய நான்கு ஒருநாள் போட்டிகள் என தனது முதல் 5 போட்டிகளிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ப்ரீட்ஸ்கே. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இந்த சாதனை 2008ஆம் ஆண்டு 74 ரன்கள் எடுத்த ஹெர்ஷல் கிப்ஸால் நிகழ்த்தப்பட்டது. லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்களும், கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக 83 ரன்களும், கெய்ர்ன்ஸ் மற்றும் மெக்கேவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 57 மற்றும் 88 ரன்களும், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 85 ரன்களும் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த ஜாண்டி ரோட்ஸ், குவின்டன் டி கொக், ஹென்ரிச் கிளாசன் போன்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் வரிசையில் தற்போது மேத்யூ இணைந்துள்ளார். 26 வயதாகும் மேத்யூ, இதுவரை தான் விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 463 ரன்கள் எடுத்துள்ளார். 92.60 சராசரி உடன், ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களையும் அடித்துள்ளார். மேத்யூ ப்ரீட்ஸ்கேவின் அதிரடி ஆட்டம் தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது என்றேக் கூறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்