குத்துச்சண்டையில், இந்திய பெண்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை!
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகிய இருவரும் தங்கம் வென்று, சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.;
மகளிர் குத்துச்சண்டையில் 2 முறை உலக சாம்பியனான நிகத் ஜரீனும், ஒலிம்பிக் பதக்கம் மற்றும் 2023 உலக சாம்பியன் வென்றவருமான லோவ்லினா போர்கோஹெய்னும் லிவர்பூலில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறினர். இது இந்தியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. ஆனால் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என நிறைய பதக்கங்களுடன் நாடு திரும்பினர் இந்திய வீராங்கனைகள். பதக்கப்போட்டிக்கு ஆண்கள் அணி தகுதிபெற முடியாமல் போனநிலையில் உலகளவில் பதக்கப்பட்டியலில் இந்தியாவை மூன்றாம் இடம் பிடிக்க செய்தனர் இந்திய மகளிர் குத்துச்சண்டை அணியினர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் யார்? அந்த வீராங்கனைகளின் முழு பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில், இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் நடப்பாண்டிற்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்திய மகளிர் அணி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. செப்டம்பர் 14 அன்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை நசிம் கைசைபேயை 4-1 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை மினாக்ஷி ஹூடா வீழ்த்தினார். கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் கைசைபேயிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்த போட்டியில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் ஹூடா.
அதே நேரத்தில் செப்டம்பர் 13 அன்று நடந்த 57 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் ஜாஸ்மின் லம்போரியா, போலந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூலியா ஸ்ரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆசிய சாம்பியனும், ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்றவருமான 34 வயதான பூஜா ராணி, 80 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்தின் எமிலி அஸ்கித்திடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். 26 வயதான நுபுர் ஷிரோன், போலந்தின் அகதா காஸ்மார்ஸ்காவை எதிர்த்து கடுமையாகப் போராடினார். இறுதியில் 80+ கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திய அணிக்காக தங்கப்பதக்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியா, மினாக்ஷி ஹூடா இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி போட்டியில் ஈடுபட்டவர்கள். இரு குடும்பத்தில் உள்ள ஆண்களும் குத்துச்சண்டையில் பங்கேற்க ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளனர் இந்த இரு பெண்களும்.
போட்டியின்போது மினாக்ஷி ஹூடா
யார் இந்த மினாக்ஷி ஹூடா?
குத்துச்சண்டை மண்ணான ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தை சேர்ந்தவர் மினாக்ஷி ஹூடா. குடும்பத்தின் கடைசிப்பிள்ளையான ஹூடா கடந்த 2018ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். ஆனால் குத்துச்சண்டை ஆண்களுக்கான போட்டி என கருதிய அவரது தந்தை ஸ்ரீ கிருஷ்ணன் ஹூடா, ஆரம்பத்தில் மினாக்ஷி விளையாட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மினாக்ஷியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். இரண்டு சகோதரிகளும் திருமணமாகாமல் வீட்டில் உள்ளனர். அண்ணன் டெல்லியில் தீயணைப்பு வீரராக பணிபுரிகிறார். ஆனால் மினாக்ஷியின் கனவுக்கு துணையாக இருந்த அவரது தாய், அவர்களது கிராம பயிற்சியாளரான விஜய் ஹூடா மூலம் தனது கணவரை சம்மதிக்க வைத்துள்ளார்.
இதனிடையே அக்கம் பக்கத்தினர் பலரும், கை, கால்களில் எலும்பு முறிந்து ஊனமாகிவிட்டால் பெண்ணை யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என கூறியுள்ளனர். மேலும் மினாக்ஷுக்கு செய்வது வீண்செலவு எனவும் அவளது தந்தையிடம் தெரிவித்து வந்துள்ளனர். இப்படி ஒரு ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளியேவந்து தற்போது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ஹூடா. தனது மகளின் வெற்றி தொடர்பாக பேசிய மினாக்ஷியின் அம்மா, “என் மகள் ஒரு நாள் எங்களை பெருமைப்படுத்துவாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி எடுத்தாள் என் மகள். அது எளிதான பயணம் அல்ல. இன்னும்கூட எங்கள் வீட்டில் டிவி இல்லை. இறுதிப்போட்டியைக்கூட மொபைல் போனில்தான் நான் பார்த்தேன். என் மகள் வெற்றிப் பெற்றதை என் கணவரிடம் கூறினேன். ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அவரை சீக்கிரம் வீட்டிற்கு வரச்சொன்னேன்” என தெரிவித்து தனது மகளின் வெற்றியைக் கண்டு பெருமிதம் அடைந்ததைக் கூறினார். கடந்த 2017 ஆம் ஆண்டில், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2018 இல் நடந்த கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டியில் பட்டத்தையும் வென்றிருக்கிறார் ஹூடா. பின்னர் 2019 இல் இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியனானார். அதேபோல 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சீனியர் நேஷனல்ஸில் தங்கம் வென்றிருக்கிறார்.
2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஜாஸ்மின் லம்போரியா
ஜாஸ்மின் லம்போரியா...
24 வயதாகும் ஜாஸ்மின் லம்போரியா ஹரியானா மாநிலத்தின் பிவானியில் பிறந்தவர். ஜாஸ்மின் லம்போரியாவின் தாத்தா, மாமா என எல்லோருமே குத்துச்சண்டையில் வல்லவர்கள். மேலும் லம்போரியாவின் தாத்தா ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது பெரிய தாத்தா கேப்டன் ஹவா சிங் ஆசியப் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்று அசத்தியவர். முன்னாள் தேசிய சாம்பியன்களும், அவரது மாமாக்களுமான சந்தீப் சிங் மற்றும் பர்விந்தர் சிங் ஆகியோரே லம்போரியாவிற்கு பயிற்சி அளித்திருக்கின்றனர். ஜாஸ்மினின் அப்பா ஒரு காவலராக பணிபுரிந்து வருகிறார். அம்மா வீட்டில் இருக்கிறார். ஜாஸ்மினுக்கு இரண்டு அக்காக்களும், ஒரு தம்பியும் உள்ளனர். ஜாஸ்மின் கடந்த 2021 இல் ஹவால்தாராக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மினாக்ஷியைப் போலவே, ஜாஸ்மின் வீட்டிலும் முதலில் அவள் அப்பா குத்துச்சண்டை விளையாட ஒப்புக்கொள்ளவில்லையாம்.
பதக்கம் வென்ற 4 இந்திய வீராங்கனைகள்
2016 ஆம் ஆண்டு, தான் குத்துச்சண்டை வீராங்கனையாகப் பயிற்சி பெறத் தொடங்கிய மூன்று மாதங்களில் ஜாஸ்மினின் தாத்தா இறந்துள்ளார். இதனால் பல்வேறு நிதி சிக்கல்களை ஜாஸ்மினின் குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். இப்படி பல்வேறு கடினமான சூழல்களை தாண்டி தற்போது தங்கம் வென்றுள்ளார் ஜாஸ்மின். இதுகுறித்து பேசிய அவரது தாய், அந்த சமயத்தில் எனது கணவர் வேலையில்லாமல் இருந்தார். நான்கு குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வீட்டை நடத்துவதற்கு பால், நெய் போன்றவற்றை விற்க தொடங்கினேன். முடிந்த அளவு எனது கணவருக்கு துணையாக இருந்தேன். அப்போது ஜாஸ்மினும் ஒல்லியாக இருந்தாள். இதனால் பலரும் அவளை கேலி செய்தனர். ஆனாலும் அவளது இந்த பயணத்தில் எனது குடும்பத்தினர் நின்றனர். இப்போது அதற்கான பலன் கிடைத்துவிட்டது. ஆனால் ஒலிம்பிக்கிலும் அவள் தங்கப் பதக்கம் வெல்ல விரும்புகிறோம்” என தெரிவித்தார். ஜாஸ்மின், 2021 ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்திருந்தார். தற்போது தனது மூன்றாவது உலகப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.