தோனியின் சாதனையை முறியடித்து, விமர்சகர்களின் வாயை அடைத்த ரிஷப் பண்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 முறை 50+ ரன்களை அடித்து, டெஸ்ட் தொடரில் அதிகமுறை 50+ ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட்.;
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். மேலும் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 50+ ரன்கள் அடித்ததன் மூலம், தோனி மற்றும் ரோகித் சர்மா சாதனையை முறியடித்துள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாததால், கடும் விமர்சனங்களுக்கு உள்ளான ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டின் மூலம் ரிஷப் பண்ட் படைத்த மற்றும் முறியடித்த சாதனைகள் குறித்து இங்கு காண்போம்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த ரிஷப்...
ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர்...
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஆனால் அதனை மாற்றி எழுதும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, போட்டியை டிராவை நோக்கி கொண்டு சென்றது. ஜெய்ஸ்வாலும், சாய் சுதர்சனும் டக் அவுட் ஆக, ராகுலும், கில்லும் சேர்ந்து 188 ரன்கள் அடித்தனர்.
தொடர்ந்து இவர்களின் பார்ட்னர்ஷிப் உடைய, ஜடேஜாவும், வாஷிங்டனும் பொறுப்பேற்று போட்டியை மெதுவாக கொண்டு சென்று ரன்களை குவித்தனர். இதனைப் பார்த்த இங்கிலாந்து அணி, போட்டியை டிராவில் முடித்துக் கொள்ளலாம் என்றது. ஆனால் அதற்கு இந்திய அணி ஒத்துக்கொள்ளவில்லை. ஜடேஜா, வாஷிங்டன் இருவரும் சதமடித்த பிறகே இந்திய அணி டிராவுக்கு ஒத்துக்கொண்டது. கடைசியாக இந்திய அணி 114 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது இரு அணி வீரர்களும் கைகுலுக்கி போட்டியை டிராவில் முடித்துக் கொண்டனர். இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இருந்து ரிஷப் நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் படைத்த சாதனைகள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் அவ்வளவாக விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அது அனைத்திற்கும் தற்போது பதிலளித்துள்ளார் ரிஷப் பண்ட்.
அதிக அரை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்த பண்ட்...
ஒரு இன்னிங்ஸ்... ரிஷப் படைத்த சாதனைகள்...
சிக்ஸர்கள்...
இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் அடித்த 2 சிக்ஸர்களையும் சேர்த்து, ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் இதுவரை 90 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த சேவாக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அரைசதங்கள்...
4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
50+ ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் 5 முறை 50+ ரன்களை அடித்துள்ளார் ரிஷப் பண்ட். இதன்மூலம் டெஸ்ட் தொடரில் அதிகமுறை 50+ ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இடம்பெற்றுள்ள இந்திய பேட்ஸ்மேன் & விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்
அதிக ரன்கள்...
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை விளையாடிய 67 இன்னிங்ஸ்களில் 2731 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப். இந்த வரிசையில் இரண்டாவதாக ரோகித் சர்மாவும், விராட் கோலி, சுப்மன் கில், ஜடேஜா, ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர்.
479 ரன்கள்...
இங்கிலாந்து மண்ணில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் எந்தவொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் எடுக்காத, அதிகபட்ச ரன்கள் 479 ஆகும். இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டி, 1880 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 முதல் 8 வரை தி ஓவலில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் தொடர் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்றது. இந்த 141 ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 479 ரன்கள் எடுத்த முதல் விக்கெட் கீப்பர்-பேட்டர் பண்ட் ஆவார். இதற்கு முன்பு 1998ஆம் ஆண்டு இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் 464 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஆயிரம் ரன்கள்...
மேலும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1035 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். முதலிடத்திலிருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
14 அரைசதங்கள்
SENA நாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.
நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த ஜடேஜா, கில், வாஷிங்டன்...
இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை...
இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே டெஸ்ட் தொடரில் நான்கு இந்திய வீரர்கள் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மேலும் நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் சதமடித்து விளாசினர். சுப்மன் கில், வாசிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தனர்.
கம்பேக்....
முன்னதாக 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். அப்போது பாதத்தில் பந்து பட்டு பலத்த காயம் அடைந்தார். ரிஷப்பால் நடக்கவே முடியவில்லை. இதனால் ரிஷப் பந்த் இந்த தொடரை தொடரமாட்டார் என தகவல்கள் வெளியானது. ஆனால் வலியை பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரிஷப் பண்ட் முதலுதவி சிகிச்சைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டாவது நாள் மீண்டும் களமிறங்கி 54 ரன்கள் குவித்து அசத்தினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ரிஷப்பை அனில் கும்ப்ளே உடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
மே 2002 இல் இந்தியாவிற்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்டின் மூன்றாவது நாளின் போது, மெர்வின் தில்லன் வீசிய பந்து பட்டு, கும்ப்ளேவின் தாடை உடைந்தது. ரத்தம் சொட்ட கும்ப்ளே மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன்பின்னும் முகத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து, 14 ஓவர்கள் பந்துவீசினார் கும்ப்ளே. இதனை ஒப்பிட்டு தற்போது ரிஷப்பை பலரும் வாழ்த்தி வருகின்றனர். காயத்திலிருந்து மீண்டு வந்து அரைசதம் அடித்ததுபோல, ஐபிஎல்லில் இழந்த செல்வாக்கை டெஸ்டில் மீட்டு வருகிறார் ரிஷப்.
காலில் பந்துபட்டு ரத்தம் சொட்டிய நிலையில் வெளியேறிய ரிஷப்... மீண்டும் கம்பேக் கொடுத்து அரைசதம் விளாசல்
பண்டின் இந்த சாதனைகள் வெறும் ரன்களை பற்றியது மட்டுமல்ல... பண்டின் மன உறுதியை பற்றியது. ரிஷப்பின் இந்த சாதனைகள் அனைத்தும் அவரை விமர்சித்த அனைவருக்கும் ஒரு பதிலடியாக அமைந்தது. ராம்ஜி சீனிவாசன் கூறியதைப் போல, விளையாட்டு என்பது பலவீனமான இதயங்களுக்கும், நாற்காலி விமர்சகர்களுக்கும் அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் ரிஷப் பண்ட்.