விளையாட விடாமல் சும்மா உட்கார சொன்னார் கம்பீர்? அதனால் ஓய்வை அறிவித்தேன்! - அஸ்வின்

இந்திய சுழற்பந்துவீச்சாளரும், ஆல்ரவுண்டருமான அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச போட்டிகளில் இருந்து தான் திடீர் ஓய்வு முடிவை அறிவித்ததற்காக காரணத்தை தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-26 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த 2024ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், பார்டர் - கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருந்தபோதே இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அஸ்வினின் இந்த திடீர் ஓய்வுக்கு காரணம் என்னவென்று இன்றுவரை ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உடனான அண்மை நேர்காணலில், தனது திடீர் ஓய்வு முடிவின் பின்னணியில் இருந்த உண்மையான காரணங்களை கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் பகிர்ந்த அந்த முக்கிய தகவல் குறித்து காண்போம். 


அறிமுகக்காலத்தில் தந்தையுடன்...  - 2010 ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில்...

ரவிச்சந்திரன் அஸ்வினின் தொடக்கம்...

சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. அப்படிப்பட்ட  இந்திய  அணியில் தமிழ்நாட்டு வீரர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவே. அதற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போட்டிகளின் மூலம் ஒருசில தமிழ்நாட்டு  வீரர்கள் வெளியே தெரிந்தாலும், சர்வதேச போட்டிகள் என வரும்போது அந்த  வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இப்படி இந்திய  கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலையும் தாண்டி, வெளியே தெரிந்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் சிலரே. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரவிச்சந்திரன் அஸ்வின். 1986 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் அஸ்வின். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். இதனால் சிறுவயதிலிருந்தே அஸ்வினுக்கு கிரிக்கெட்டை  சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார். அஸ்வின் தனது  தாயுடன் இருந்ததைவிட  தந்தையுடன்தான் அதிகம்  இருந்துள்ளாராம். 

கிரிக்கெட்டில் முதலில் பேட்டராக தனது  வாழ்க்கையை தொடங்கிய  அஸ்வின், நாளடைவில் சிறந்த பந்துவீச்சாளராக மாறினார். முதலில் தமிழ்நாட்டிற்காக ரஞ்சி கோப்பையில் விளையாடிய அஸ்வின், 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாடினார். ஐபிஎல்லில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினை பார்த்து வியந்த பிசிசிஐ, அந்த ஆண்டே ஒருநாள் போட்டிகளில் விளையாட அவரை தேர்வு செய்தது. அதன்படி 2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாடினாலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 


பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான இந்திரன் - சந்திரன் காம்போ

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில்தான் முதன்முதலாக அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதனைத்தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார் அஸ்வின். ஆனால் இந்தப் பயணம் கடந்தாண்டு டிசம்பரில் முடிவுக்கு வந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வின்.

அஸ்வினின் டெஸ்ட் சாதனைகள்...

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என பலவடிவங்களில் விளையாடி உள்ளார் அஸ்வின். 2010 முதல் 2024 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய அஸ்வின் மொத்தம் 106 போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அணில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 1 டெஸ்ட் இன்னிங்ஸிற்கு 5 விக்கெட் வீதம், 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு டெஸ்டில் சராசரியாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடதுகை பேட்ஸ்மேன்களை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற உலக சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். மொத்தம் 268 முறை டெஸ்டில் இடதுகை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 முறை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய ஆல்ரவுண்டராக அஸ்வின் உள்ளார். டெஸ்டில் மொத்தம் 11 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் 50.7ஸ்ட்ரைக் ரேட்டை பெற்றுள்ளார். 


ராகுல் டிராவிட் உடனான நேர்காணலின்போது...

அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு...

அண்மையில் டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதிய இங்கிலாந்து, இந்திய அணிகள் தொடரை 2-2 என டிராவில் முடித்தன. இத்தொடரில் இங்கிலாந்துதான் வெல்லும் என கூறப்பட்ட நிலையில், இந்தியா போராடி போட்டியை சமனில் முடித்தது. ஆனால் இத்தொடருக்கு முன் பெரும் கேள்வி ஒன்று இந்திய கிரிக்கெட் அணியை சூழ்ந்திருந்தது. அது என்னவென்றால் இந்திய அணிக்கு தலைமை தாங்கப்போவது யார்? என்பதுதான். காரணம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரைத்தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்தார். இவர்களுக்கு முன்னரே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் ரவிச்சந்திரன் ஓய்வை அறிவித்தார்.

இப்படி அனுபவ வீரர்கள் அணியில் இல்லாததால் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதற்கு முன்னரே இந்த மூன்று அனுபவ வீரர்களின் அடுத்தடுத்த திடீர் ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன என பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதுவும் அஸ்வின் சர்வதேச தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்தது ஏன் என கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இவர்களின் ஓய்வு அறிவிப்பிற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தனது திடீர் ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அஸ்வின் ரவிச்சந்திரன்.

குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது தனது திடீர் ஓய்வு முடிவு குறித்து டிராவிட் இடம் பகிர்ந்த அஸ்வின், சிரித்தப்படி எனக்கு வயதாகிவிட்டது என நினைத்தேன் எனக்கூறிவிட்டு, “வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அதிகம் வெளியில் உட்கார வைக்கப்பட்டேன். அதுதான் என்னை வீட்டிற்கு வரவழைத்தது. அணிக்கு எனது பங்களிப்பை வழங்கக்கூடாது என்பது அர்த்தமல்ல, மாறாக குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவுதான். மேலும் நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது. அப்போதுதான் பரவாயில்லை என்று முடிவெடுத்தேன். அதுமட்டுமில்லாமல் என் மனதில் நான் 33-35 வயதில் ஓய்வுபெற வேண்டும் என எப்போதோ முடிவு செய்து வைத்திருந்தேன்” எனவும் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அது குடும்பத்திற்கு ஏற்ற நேரத்தை கொடுக்கும் எனவும் அஸ்வின் தெரிவித்தார். தனது முடிவு விரக்தியில் எடுக்கப்பட்டது இல்லை எனவும், மாறாக தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பது பற்றியது என்றும் தெளிவுபடுத்தினார்.


சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வின் - அவரது தந்தை ரவிச்சந்திரன்

அஸ்வின் தந்தை ஆதங்கம்...

முன்னதாக அஸ்வினின் ஓய்வு குறித்து பேசியிருந்த அவரின் தந்தை, “அஸ்வின் கிரிக்கெட் துறையில் 14 முதல் 15 ஆண்டுகள் உள்ளார். திடீரென இந்த ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது, அதேநேரம் இது எதிர்பார்த்ததுதான். காரணம் என்னவென்றால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். எவ்வளவு நாள்தான் இதை தாங்கிக்கொள்வார்?” எனப் பேசியிருந்தார். அஸ்வின் தந்தையின் இந்த பேச்சு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இதே குற்றச்சாட்டைதான் ரசிகர்களும் முன்வைத்தனர். ஆனால் அந்த பரபரப்பை அடக்குவதற்காக தனது தந்தையின் பேச்சிற்கு விளக்கமளித்த அஸ்வின், என் அப்பா அதிகம் ஊடகங்களில் பேசியது இல்லை. டேய் அப்பா என்னடா இதெல்லாம்... வழக்கமான அப்பாக்களின் டயலாக்கை நீயும் பேசுவாய் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் அவரை மன்னிக்க வேண்டும். அவரை தனியாக விடுங்கள்” என தனது சமூக வலைதளப்பதிவின் மூலம் குறிப்பிட்டிருந்தார். அப்போது அந்த பிரச்சனையை மறைப்பதற்காக அஸ்வின் விளக்கமளித்தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அஸ்வினே மனம்திறந்து தற்போது பேசியுள்ளது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் அஸ்வினை விளைாயாடவிடாமல் ஓரம்கட்டி சும்மா உட்கார வைத்தது கம்பீர் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்