பற்களில் தொடர்ந்து பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறதா? கவனமாக இருங்கள்...

Update:2025-05-20 00:00 IST
Click the Play button to listen to article

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்கவேண்டுமானால் அதற்கு நன்றாக மென்று சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். இப்படி சாப்பிடுவதால் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இதற்கு முக்கியமான தேவை ஆரோக்கியமான பற்கள். பார்த்தவுடன் ஒருவரை ஈர்க்கக்கூடிய சிரிப்பு, பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சாத்தியமாகும். பற்களை எப்படி முறையாக பராமரிப்பது? டென்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் என்னென்ன? ஈறுகளில் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்வது? என்பன போன்ற பல சந்தேகங்கள் குறித்து நம்முடன் உரையாடுகிறார் ரூட்கேனால் ஸ்பெஷலிஸ்ட் விஜேந்திர மகிரெட்டி.

டென்டல் துறையில் AI பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்களே... எப்படி?

நோயை கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சையளித்தலில் செயற்கை நுண்ணறிவு மிகவும் உதவியாக இருக்கிறது. பெரிய எக்ஸ்ரே எடுக்கும்போது அதை பார்த்தே பிரச்சினைக்கான சிகிச்சையை சொல்லக்கூடிய டெக்னாலஜி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு, பல் இல்லாதவர்களுக்கு இம்ப்ளாண்ட் சிகிச்சை மேற்கொள்ளும்போது பல் எலும்புக்குள் ஒரு டைட்டானியம் ஸ்க்ரூ போட்டு மேலே செயற்கை பல் பொருத்தப்படும். அதையே எப்படி பொருத்துவது? எந்த கோணத்தில் பொருத்துவது? எந்த இடத்தில் மிகச்சரியாக பொருத்துவது? என்பன போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை AI கொடுக்கிறது. இது இப்போதுதான் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருப்பதால் எதிர்காலத்தில் இன்னும் முன்னேற்றமடைய வாய்ப்புகள் இருக்கின்றன.

டென்டல் துறையில் எல்லாமே டிஜிட்டல்மயமாகிவிட்டதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி கூறுங்கள்!

எல்லா கிளினிக்குகளுமே டிஜிட்டல்மயமாகிவிட்டன. பல் சொத்தை ஆழமாக போய்விட்டது என்றாலே ரூட் கேனால் சிகிச்சை அளிக்கப்படும். அந்த சிகிச்சைக்கு பிறகு பாதுகாப்பிற்காக அதன்மீது கேப் போடப்படும். முன்பெல்லாம் கேப் போட மாவு போன்ற ஒன்றை பயன்படுத்தி அளவெடுத்து லேபிற்கு அனுப்பி க்ரவுன் உருவாக்கப்படும். ஆனால் இப்போது டிஜிட்டல் முறையில் வாயை ஸ்கேன் செய்யும் மெஷின் இருக்கிறது. ரூட் கேனால் முடித்தபிறகு டிஜிட்டல் ஸ்கேன் செய்து கேட் கேம் மெஷினிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். அதிலிருந்து 3டி பிரிண்ட்டிங் செய்யப்பட்ட செயற்கை பற்கள் கிடைக்கும். இப்படி டிஜிட்டல் முறையில் செய்யப்படும் பற்களானது அளவெடுத்து செய்வதைவிட மிகவும் கச்சிதமாக இருக்கும். இப்படி டிஜிட்டல் மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த சிகிச்சைமுறைக்கு குறைந்த நேரமே தேவைப்படும். மொத்த சிகிச்சையுமே 28 முதல் 48 மணிநேரத்துக்குள் முடிந்துவிடும்.


துல்லியமான செயற்கை பற்களை உருவாக்குவதில் டிஜிட்டல் வளர்ச்சி

Periodontal disease என்றால் என்ன? இது எதை பாதிக்கிறது?

இது ஈறுகளில் வரக்கூடிய பிரச்சினை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி பற்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் தினமும் பிரஷ்ஷால் பல்துலக்கினாலும் ஒருசில இடங்களுக்கு பிரஷ் போகாது. அதுபோன்ற இடங்களில் அழுக்கு சேரும் என்பதால் க்ளீனிங் செய்வது அவசியம். இதனால் ஈறு பிரச்சினைகள் வராது. அப்படி சுத்தம் செய்யாதபோது ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பிரச்சினைகள் வரும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு பற்களுக்குள் லேசர் லைட் செலுத்தப்படும். இதனால் ஈறுகள் பற்களுடன் இறுக்கமாக ஒட்டி ஆரோக்கியமாக மாறும்.

ஈறு பிரச்சினைகள் தவிர வேறு எதற்கெல்லாம் லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது?

ரூட் கேனால் செய்ய பயன்படும். லேசர் சர்ஜரி செய்தால் ரத்தம் அதிகமாக வழியாது. அதேபோல் வலியில்லாமல் இருப்பதோடு சிகிச்சையெடுத்த காயங்களும் விரைவில் ஆறும்.

வாய் துர்நாற்றம் எதனால் வருகிறது? இதற்கு தீர்வு என்ன?

சிலருக்கு வாய் துர்நாற்றம் எப்போதும் இருக்கும். சரியாக பல்துலக்காமை, ஈறு பிரச்சினைகள், சரிவர பராமரிக்காமை, புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் வாய் துர்நாற்றம் வரும். இதற்கு மவுத் வாஷ், மவுத் ஃப்ரெஷ்னர்ஸ் பயன்படுத்தலாம்.


வருடத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம்

ஜிஞ்சுவைட்டிஸ் (Gingivitis) என்றால் என்ன?

இது ஈறு சம்பந்தப்பட்ட நோய். ஈறு வீக்கம் ஏற்பட்டிருந்தால் ப்ரஷ் செய்யும்போது ஈறுகளிலிருந்து ரத்தம் வழியும். ஈறுகளை சுத்தமாக வைத்திராவிட்டால் வரக்கூடிய பிரச்சினை இது. ஈறுகளை நன்றாக சுத்தம்செய்து வைத்திருந்தாலே இந்த பிரச்சினை வராமல் தடுக்கலாம்.

கேவிட்டிஸ் எப்படி வருகிறது?

பல் சொத்தைக்கு அடிப்படை காரணமே முறையாக பற்களை பராமரிக்காததுதான். முதலில் கறையாக உருவாகி, அதுவே கடினமான அடுக்காக உருவாகிவிடும். பின்னர் சொத்தையாக மாறும். ஆண்டுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தால் சொத்தை சிறிதாக இருக்கும்போதே கண்டறிந்து சுத்தம் செய்து அதன்மீது சிமெண்ட் வைத்து அடைத்துவிடலாம். ஆனால் பெரும்பாலானோர் வலி வரும்வரை மருத்துவரிடம் செல்லமாட்டார்கள்.


எது சாப்பிட்டாலும் உடனடியாக வாயை கொப்பளித்துவிடுவது நலம்  - மருத்துவர்

பல்லில் தொடர்ந்து பிரச்சினை வந்துகொண்டே இருந்தால் உடலுக்குள் பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்களே, அது உண்மையா?

பல், ஈறுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் உடலுக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு டயாபெட்டிஸ் நோயாளிகளுக்கு ஈறு பிரச்சினைகள் வரலாம். பல்லில் எலும்பு தேய்மானம் அதிகமாக இருக்கும். ஈறுகள் கீழே இறங்கிவிடும். உடலில் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து பல்லில் பிரச்சினைகள் இருக்கும். ஒருசிலர் 50 வயதுக்கு பிறகு பல் எதற்கு என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் பல்லின் தேவை அதிகம். உணவை சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட்டால்தான் செரிமான பிரச்சினைகள் இருக்காது.

கார்பனேட்டட் டிரிங்க்ஸ் குடித்தால் பல்லின் எனாமல் தேய்ந்துவிடும் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

பல்லின் எனாமல் போய்விடும் என்று சொல்லமுடியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக ஃப்ரஷ் ஜூஸ்கள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதனால் எனாமலும் வலிமையாகும்.

சாக்லேட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு பற்கள் சொத்தையாவதை போன்று பெரியவர்களுக்கும் ஆகுமா?

அப்படி சொல்லமுடியாது. சிலருக்கு எனாமல் குறைபாடு இருக்கும். அதை எனாமல் ஹைபோப்லேசியா என்று சொல்வார்கள். இவர்கள் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிட்டால் வாயில் புளிப்பு சுவை அதிகமாக தெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அதுபோன்றவர்கள் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்