மனைவியிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - ஏ.ஆர். ரகுமான்
முன்பெல்லாம் வெறிபிடித்தவன் போல இரவும், பகலும் வேலைசெய்தேன். அதிகமாக வேலைசெய்யும்போது வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போதெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கவும், நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் நான் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்வதாக ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.;
சினிமாவில் எத்தனை நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள் வந்தாலும் ஒருவரின் தனித்துவமும், தன்னடக்கமும், பணிவும், உழைப்பும்தான் அவரை நிலைநிறுத்தும். அந்த வரிசையில் தனது உழைப்பாலும், தனித்துவத்தாலும், நல்லடக்கத்தாலும் தன்னை இந்திய சினிமா மட்டுமின்றி உலகரங்கில் நிலைநிறுத்திக் கொண்டவர்தான் ஆஸ்கர் நாயகன் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான். எவ்வளவு புகழ்ச்சிகள் இருந்தாலும் தனது எளிமையால் மக்களை நினைவுக்கூரச் செய்வார். உலகத்தரம் வாய்ந்த இசைகளை வழங்கி சர்வதேச அளவில் இந்திய சினிமாவிற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். இதற்கிடையில் கடந்தாண்டு மனைவியை பிரிவதாக அறிவித்தார் ஏ.ஆர். ரகுமான். இச்செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சாய்ரா பானு - ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து செய்தி வெளியானதிலிருந்து தனது குடும்ப வாழ்க்கை குறித்தும், குடும்பத்திற்கான தனது நேரம் குறித்தும் அவ்வப்போது நேர்காணல்களில் பேசிவருகிறார் ஏ.ஆர்.. அந்தவகையில் அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது வேலை, குடும்ப உறுப்பினர்களுக்கான நேரம் உள்ளிட்டவை குறித்து இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து பேசியுள்ளார். இது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஏ.ஆர். ரகுமான்
‘இசைப்புயலின்’ இசைப்பயணம்...
1992ஆம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்திய சினிமாவில் அறிமுகமானவர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான். அப்படித்தான் நம் அனைவருக்கும் அவரைத் தெரியும். ஆனால் தனது 13 வயதில் இருந்தே பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த ஏ.ஆர். ரகுமான் குடும்பநிலை காரணமாக இசைப்பக்கம் திரும்பினார். ஆனால் இன்றோ இசையின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஏ.ஆர். ரகுமானுக்கு 9 வயது இருக்கும்போது அவரது தந்தை இறந்துவிட்டார். அதிலிருந்து குடும்ப பொறுப்புகளை ஏற்கவேண்டிய சூழல்.
தந்தை இறப்பிற்கு பிறகு, ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ஆசிரியராக இருந்த மாஸ்டர் தன்ராஜிடம் பயிற்சிப்பெற்ற ரகுமான், தனது 11 வயதில் மலையாள இசையமைப்பாளரும், தனது தந்தையின் நெருங்கிய நண்பருமான எம்.கே. அர்ஜுனனின் இசைக்குழுவில் இணைந்தார். அங்கு ஏ.ஆர். ரகுமானுக்கு கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கினார் அர்ஜுனன் மாஸ்டர். அதன் பிறகு, எம்.எஸ். விஸ்வநாதன், விஜய பாஸ்கர், இளையராஜா, ரமேஷ் நாயுடு, விஜய் ஆனந்த், ஹம்சலேகா மற்றும் ராஜ்கோட்டி உள்ளிட்ட பல இந்திய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து ஆவணப்படங்களுக்கும், விளம்பரங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு 1992-ல் கிடைத்த வாய்ப்புதான் ‘ரோஜா’ திரைப்படம். இப்படத்தின் பாடல்களுக்கு இன்றளவும் இருக்கும் வரவேற்பு என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
முத்து படம் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஏ.ஆர். ரகுமான்
படம் வெளியான அடுத்தாண்டே தனது முதல் படத்திற்கே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ஏ.ஆர். ரகுமான். இதற்கிடையே ரோஜாவைத் தொடர்ந்து மலையாள படமான “யோதா” படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்தார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் பாடல்களையும், சதாப்தங்கள் கடந்தாலும் பல தலைமுறையினர்கள் கொண்டாடும் இசையையும் தந்தார். மணிரத்னத்தை தொடர்ந்து பாரதிராஜாவுடன் இணைந்து ‘கிழக்கு சீமையிலே’ எனும் சிறந்த படைப்பிற்கும் தனது இசையால் உயிர்கொடுத்தார். தொடர்ந்து முத்து படத்தின் மூலம் ஜப்பானிய ரசிகர்களையும் கவர்ந்தார். "முத்து", மேற்கத்திய பாரம்பரிய இசை, கர்நாடக இசை, நாட்டுப்புற இசை மரபுகள், ஜாஸ், ரெக்கே, ராக் இசை ஆகியவற்றின் கலவையாக இருந்ததால், அவரது ஒலிப்பதிவுகள் சர்வதேச மட்டத்திலும் அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கின. அதன்பின் வந்த மின்சாரக் கனவு படத்திற்காக இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.
தொடர்ந்து ஜாவேத் அக்தர், குல்சார், வைரமுத்து, வாலி போன்ற இந்திய கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடனும், இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சங்கர், ரவிக்குமார் போன்றோருடனும் பணியாற்றிய ஏ.ஆர். ரகுமான் பல அற்புத படைப்புகளை கொடுத்துள்ளார். இந்திய சினிமாவைத் தாண்டி உலக அரங்கில் பல படைப்புகளை கொடுத்துள்ளார் ஏ.ஆர். 2003ஆம் ஆண்டு வெளியான மாண்டரின் மொழி திரைப்படமான ‘வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்’ படத்திற்கு இசையமைத்தார். மேலும் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை வரலாறான பிரிட்டிஷ் திரைப்படம் ‘எலிசபெத்: தி கோல்டன் ஏஜு’க்கு சேகர் கபூருடன் இணைந்து இசையமைத்தார். தொடர்ந்து 2009-ல் வெளியான தனது முதல் ஹாலிவுட் படமான ‘கப்பிள்ஸ் ரீட்ரீட்’ படத்திற்கு இசையமைத்தார். இதன்மூலம் ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் பாடலாசியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் பிஎம்ஐ லண்டன் விருதைப் பெற்றார். இதற்கிடையே 2008ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் திரைப்படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். இதன்மூலம் ஆஸ்கர் விருதுவென்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஏ.ஆருக்கு பிறகு 2023-ல் ஆர்ஆர்ஆர் படத்திற்காக கீரவாணி விருது வென்றார். இப்படி இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் ஏ.ஆர். ரகுமானின் பங்கு என்பது அளப்பரியது.
உலகளாவிய மொழிப்படங்களுக்கு இசையமைத்து 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆஸ்கர் நாயகன்
சினிமாவைத் தாண்டி தேசப்பற்றிற்காக அவர் இசையமைத்து பாடிய ‘வந்தே மாதரம்’ ஆல்பம் தற்போதும் இந்தியாவின் தேசியப் பாடலுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தன்று இந்தப் பாடலை ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டிருந்தார். இந்திய அளவில் தமிழையும், உலகளவில் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என எப்போதும் கூறிவரும் ஏ.ஆர். ரகுமான், 2010 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலையும் இயற்றினார். அதுபோல 2010-ல் காமன்வெல்த் போட்டிகள், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாப் போட்டி என பல்வேறு தருணங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் உணர்ச்சியோடு ஒன்றியவை. காதல், சோகம், பிரிவு, தேசபக்தி என அனைத்துவிதமான மனித உணர்ச்சிகளுக்கும் இசையை தந்து 30 வருடங்களுக்கும் மேலாக மக்களை ஆசுவாசப்படுத்தி வருகிறார் ஏ.ஆர். ரகுமான்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தமிழ்நாடு அரசின் கலைமாமணி, உத்தரப் பிரதேசத்தின் அவத் சம்மான், மத்தியப் பிரதேசத்தின் தேசிய லதா மங்கேஷ்கர் விருது, ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் குளோப், கிராமி, ஃபிலிம்ஃபேர், ஐஐஎஃப்ஏ, சிறந்த இசை, சிறந்த பின்னணி, சிறந்த இசையமைப்பாளர் என எண்ணற்ற விருதுகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார் ஏ.ஆர். ரகுமான். இப்படி பல விருதுகளுக்கும், பல இதயங்களை வருடிய இசைக்கும், குரலுக்கும் சொந்தக்காரரான ஏ.ஆர். ரகுமானின் வாழ்வை ஒரு சோகம் சூழ்ந்தது. அது கடந்தாண்டு வெளியான அவரின் விவாகரத்து செய்தி.
மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஏ.ஆர். ரகுமான்
விவாகரத்து...
ஏ.எஸ். திலீப் குமார் என்ற இயற்பெயர் கொண்ட இந்துக் குடும்பத்தை சேர்ந்த ஏ.ஆர். ரகுமான், தனது 20களில் இஸ்லாத்தை தழுவினார். திலீப்குமார் என்பதிலிருந்து அல்லா ரக்கா ரகுமான் (ஏ.ஆர். ரகுமான்) என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் சூஃபித்துவத்தை பின்பற்றி வருகிறார். இந்துவில் இருந்து இஸ்லாமிற்கு மாறிய இவர், 1995-ல் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு கதீஜா, ரஹிமா என இரு மகள்களும், அமீன் என ஒரு மகனும் உள்ளார். கிட்டத்தட்ட 29 வருடங்கள் தங்கள் வாழ்க்கையை அன்பாலும், காதலாலும், இசையாலும் நகர்த்திவந்த இந்த தம்பதி கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தனர். ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும் சில காரணங்கள் ஈடுகட்ட முடியாத இடைவெளியை இருவரிடையே ஏற்படுத்தியதாக மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். ஏ.ஆர். ரகுமானும், “திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்டிவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராத முடிவு வந்துவிட்டது. உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர்களின் இந்த விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குடும்பம்...
விவாகரத்துக்கு முன்புவரை எந்த கிசுகிசுக்களுக்கும் ஆளாகாத ஏ.ஆர். ரகுமான், இந்த செய்திக்கு பின் பல்வேறு வதந்திகளால் சூழப்பட்டார். ஆனால் அப்போதும் தனது கணவருக்கு ஆதரவாக பேசினார் சாய்ரா பானு. இப்படி கடந்தசில மாதங்களாகவே விவாகரத்து அறிவிப்பு, மனைவியின் உடல்நலப் பிரச்சனை, தனது உடல்நலப் பிரச்சனைகள், பெயருக்கு களங்கம் என பல்வேறு இன்னல்களை சந்தித்தார் ஏ.ஆர். ரகுமான். விவாகரத்து செய்தியைத் தொடர்ந்து சமீபத்தில் பங்கேற்கும் நேர்காணல்கள் பலவற்றிலும் குடும்பம், குடும்பத்திற்கான நேரம் குறித்து பேசிவருகிறார் ஏ.ஆர். ரகுமான்.
நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஏ.ஆர். ரகுமான், “சின்ன வயசில் அப்பா இறந்துட்டாங்க. அப்புறம் பாட்டி இறந்துட்டாங்க. அப்புறம் நான் வச்சிருந்த நாய்க்குட்டி இறந்துடுச்சி. எனக்கு பிடிச்ச எதுவுமே நிலைக்கவில்லை. எது புடிச்சிருக்கோ அது நம்மைவிட்டு போய்விடுகிறது. இதுதான் வாழ்க்கை. அதனால் தள்ளி இருப்பது நல்லது” என சொல்லியிருந்தார். மற்றொரு நேர்காணலில், யாரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “குடும்பத்திடம்தான். எனது மகள்கள், எனது முன்னாள் மனைவி, மகன் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நேர்காணல் ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்
இந்நிலையில் அண்மையில் உஃப் யே சியாப்பா எனும் டயலாக் இல்லாத படம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “சிலநேரங்களில் நாம் நிறைய திட்டமிட்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் ரத்தாகிவிடும். சிலநேரங்களில் நம்மைத் தாண்டி அனைத்தும் நடக்கும். தண்ணீரைப் போல காலப்போக்கில் செல்கிறேன். அது கலனிற்கு ஏற்ற வடிவத்தை பெற்றுக்கொள்கிறது. வேலையிலும் அப்படித்தான். முன்பெல்லாம் வெறிபிடித்தவன் போல இரவும், பகலும் வேலைசெய்தேன். அதிகமாக வேலைசெய்யும்போது வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போதெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கவும், நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் நான் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்கிறேன்” என வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து மிக வெளிப்படையாக பேசியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என அவரது மனம் விரும்புகிறது. அதுதான் வார்த்தைகளால் வெளிப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.