பாகிஸ்தான் வீரருடன் நட்பில் இல்லை - சாதனை நாயகன் நீரஜ் சோப்ரா விளக்கம்

Update:2025-05-20 00:00 IST
Click the Play button to listen to article

2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அதுமுதல் இந்தியாவின் தங்க மகன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளுக்காக தன்னை தயார் செய்துவந்த இவர், 2013ஆம் ஆண்டு முதன்முதலில் சர்வதேச போட்டியில் பங்கேற்றார். அதிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தடகள போட்டியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் நீரஜ் சோப்ரா. இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தநிலையில், பாகிஸ்தான் வீரருடனான நட்பால் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு நீரஜ் விளக்கமளித்துள்ளார். 

தடகளமே தனது வாழ்க்கை

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா. சிறுவயதில் உடற்பருமனாக இருந்த இவரை உடன் படித்தவர்கள் கேலி கிண்டல் செய்ததாலேயே எப்படியாவது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வேண்டுமென தீர்மானம் எடுத்தார். தனது இரண்டு சகோதரிகளின் உந்துதலால் ஜிம்னாஸ்டிக் வகுப்பிற்குச் சென்ற நீரஜிற்கு விளையாட்டின்மீது திடீரென ஆர்வம் ஏற்பட, ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்தினார். அப்படி ஒருநாள், எந்தவித பயிற்சியும் இல்லாமல் நீரஜ் சிறப்பாக ஈட்டி எறிவதை பார்த்த முன்னாள் ஈட்டி எறிதல் வீரர் அக்‌ஷய் சௌத்ரி இவருக்கு பயிற்சியளிக்க, அங்கிருந்து நீரஜ்ஜின் வெற்றிப்பயணம் தொடங்கியது. முதலில் உள்ளூரில் ஆரம்பித்த வெற்றியானது இவரை சர்வதேச போட்டிகள்வரை கொண்டுசென்றது. 2013ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த போட்டியில் இவர் பங்கேற்றபோதும் அதில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வியையே தனக்கு உந்துதலாக எடுத்துக்கொண்ட நீரஜ், அடுத்த ஆண்டு நடைபெற்ற யூத் ஜூனியர் உலக தடகளத்தில் 81.04 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பது நீரஜுக்கு நன்றாகவே பொருந்தும். ஏனென்றால் அந்த பெரிய வெற்றிக்கு பிறகான அடுத்த போட்டியில் படுதோல்வியை தழுவினார். ஆனால் அத்துடன் விளையாட்டை நிறுத்தவில்லை. மீண்டும் தீவிர பயிற்சி மேற்கொண்டு சவுத் ஏஷியன் சீனியர் தொடர் மற்றும் ஆசிய தடகளப் போட்டிகள் போன்றவற்றில் தங்கங்களை வென்றார். அதன்பின் மீண்டும் தோல்வி, பயிற்சியாளருடன் பிரச்சினை என சறுக்கலை சந்தித்தாலும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதனையடுத்து 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 87 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்ததையடுத்து ‘இந்தியாவின் தங்க மகன்’ என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார். மீண்டும் புடாபெஸ்ட் நகரில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று தனக்கு நிகர் தானே என்று நிரூபித்தார். ஆனால் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.


நீரஜ் சோப்ராவை வாழ்த்திய பிரதமர் மோடி

தனது சாதனையையே முறியடித்த நீரஜ்!

இப்படி தொடர்ந்து வெற்றி தோல்விகளை மாறி மாறி தழுவிவந்த நீரஜ் சோப்ரா இப்போது தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறார். கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் டைமண்ட் லீக் தடகள போட்டிகளின் 16வது சீசன் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி மற்றும் குல்வீர் சிங் பங்கேற்றனர். இதில் தனது 18வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ், 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த சோப்ரா, இரண்டாம் முறை முயற்சித்ததில் ‘No Throw' என்றானதால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியாமல் போனது. மூன்றாவது முறை 90.23 மீட்டர் தூரம் எறிந்து தனது பழைய சாதனையை முறியடித்தார். அதனைத் தொடர்ந்து 80.56 மீட்டர் ஃபவுல் மற்றும் 88.20 மீட்டர் எறிந்து அடுத்தடுத்த வாய்ப்புகளில் மூன்றாம் முறை தூரத்தை முறியடிக்க முடியவில்லை. இருந்தாலும் இது பழைய போட்டிகளின் தூரத்தை முறியடித்திருக்கிறது. இந்த போட்டியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தை பெற்றிருந்தாலும் நீரஜின் சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்விதமாக அமைந்திருக்கிறது. இதனால் இந்த சாதனையை புரிந்த மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் உலகளவில் 25வது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நீரஜ். இதே போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். நீரஜ் சோப்ராவின் இந்த புதிய சாதனையை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர், “ஒரு அற்புதமான சாதனை! தோஹா டைமண்ட் லீக் 2025ஆம் ஆண்டு தொடரில் 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததற்காகவும், தனது தனிப்பட்ட சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. இந்தியா மகிழ்ச்சியடைந்து பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடனான உறவு குறித்து விளக்கமளித்த நீரஜ்

பாகிஸ்தான் வீரர் அர்ஷத்துடனான உறவு குறித்து... 

இதனிடையே நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் இடையேயான உறவு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், இருவரும் ஒருபோதும் நண்பர்களாக இருந்தது இல்லை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் நீரஜ். அதாவது இந்த மாதம் 24ஆம் தேதி பெங்களூருவில் கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நடத்த நீரஜ் சோப்ரா திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக இந்நிகழ்வு கால வரையறையின்றி ஒத்துவைக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரரான அர்ஷித் நதீமுக்கு நீரஜ் அழைப்பு விடுத்திருந்தார். இது நடந்த ஒருசில நாட்களில் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. இதனால் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தார் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்நிலையில் தோஹாவில் நடந்த போட்டியில் இதுகுறித்து நீரஜ் விளக்கமளித்திருக்கிறார். அதில், முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் நதீமுக்கும் இடையே வலுவான உறவும் இல்லை, நாங்கள் ஒருபோதும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்ததில்லை. தடகள வீரர்களாக நாங்கள் பேசிகொள்ளத்தான் வேண்டும். இப்படி உலகம் முழுவதுமே எனக்கு சில நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். ஈட்டி எறிதலில் மட்டுமல்ல; மற்ற விளையாட்டைச் சேர்ந்த நண்பர்களும் இருக்கின்றனர். என்னிடம் யாராவது மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக நடந்துகொள்வேன். எல்லோருமே தங்கள் நாட்டுக்காக போட்டியிடுகிறார்கள். எல்லோரும் தங்களுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்த விரும்புகின்றனர்” என்று கூறி தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.

Tags:    

மேலும் செய்திகள்