புதிய மாற்றம் நிகழும்
2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பணவரவு பரவாயில்லை. ஆனால் குரு 12-ஆம் இடத்தில் இருப்பதால் குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கடந்த கால மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க யாராவது முன் வருவார்கள். உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இவை அனைத்திற்கும் இறைவன் உங்களோடு துணை இருப்பார். சொத்து விற்பனைக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த வாரம் விற்பனை நடக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பயணங்கள் நன்மையை ஏற்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் நன்றாக இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆன்சைட் வாய்ப்புகளுக்கும் சாத்தியம் உண்டு. சொந்தத் தொழில் சுமாராக இருக்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளி லாபம் அடைவார், நீங்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு உண்டு. அதேவேளை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவும், பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டாகும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை மற்றும் லாபம் அதிகரிக்கும். அம்மாவுடைய அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு அது முழுமையாக கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் துர்க்கையையும், சித்தர்களையும் வழிபடுவது நல்லது.